Published : 29 Aug 2017 10:54 AM
Last Updated : 29 Aug 2017 10:54 AM

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 490 ரன்களுக்கு டிக்ளேர்: மே.இ.தீவுகள் வெற்றி இலக்கு 322 ரன்கள்

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 490 ரன்கள் குவிக்க, மே.இ.தீவுகளுக்கு வெற்றி இலக்கு 322 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் 169 ரன்கள் என்ற பெரிய முன்னிலை பெற்ற மே.இ.தீவுகள் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்திடம் பிடியை நழுவ விட்டது. மொயீன் அலி 84 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 61 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 490 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்யும் அளவுக்கு வந்தது.

ஆனால் இருமுறை வோக்ஸ், மொயின் அலி அவுட் ஆகியிருக்க வேண்டிய தருணத்தில் களநடுவரின் நோ--பால் தீர்ப்புகள் மே.இ.தீவுகளுக்கு பின்னடைவை ஏறப்டுத்தியது. இருமுறையும் நோ-பால்கள் சந்தேகத்திற்கிடமாகவே அமைந்தன. அதாவது நோ-பால் கொடுத்திருக்க வேண்டாம் என்றே தெரிந்தது. இதனால் மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்க்க முடிந்தது. முன்னதாக கேப்டன் ஜோ ரூட் 111 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 72 ரன்களை விளாசினார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மலான் எதிரெதிர் பாணி அரைசதங்களை அடித்தனர், பென்ஸ்டோக்ஸ், பென் ‘ஸ்ட்ரோக்ஸ்’ ஆக, டேவிட் மலான் நிதானன் ஆனார். இருவரும் இணைந்து 91 ரன்களைச் சேர்த்தனர், அதன் பிறகு ராஸ்டன் சேஸ் 22 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகளுக்கு வழி திறந்தது. ஜானி பேர்ஸ்டோ மிகவும் திமிர்த்தனமான ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுல்டு ஆனார். இப்போது இங்கிலாந்து 158 ரன்களையே முன்னிலை பெற்றிருந்தது, கடைசியில் மொயின் அலி 93 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களில் பிஷூ பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுக்கும் போது முன்னிலை 300 ரன்கள் பக்கம் வந்தது. கிறிஸ் வோக்ஸ் 104 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுக்க ஒருவரும் சதம் எடுக்காமல் இங்கிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களான 490-ஐ எட்டியது.

மே.இ.தீவுகளின் தொடக்க வீரர்களில் முதல் இன்னிங்ஸ் சத நாயகன் பிராத்வெய்ட் 4 ரன்களுடனும் பொவெல் 1 ரன்னுடனும் 6 ஓவர்களை இழப்பில்லாமல் நகர்த்தி முடித்தனர். இந்த இலக்கை இந்த மைதானத்தில் துரத்துவது அவ்வளவு எளிதல்ல.

தேநீர் இடைவேளையின் போதுகூட இங்கிலாந்து 200 ரன்கள் பக்கம்தான் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் கிரெய்க் பிராத்வெய்ட்டின் ஒரு படுமோசமான ஓவரில் அனைத்தும் மாறிப்போனது, மே.இ.தீவுகள் தனது மோசமான ஆட்டத்துக்குத் திரும்பியது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஷனன் கேப்ரியல் 2 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்தார்.

போதாக்குறைக்கு இந்திய நடுவர் எஸ்.ரவி வேறு மே.இ.தீவுகளுக்கு எமனானார். மொயின் அலி 32 ரன்களில் இருந்த போது பிஷூ பந்தில் அவர் விக்கெட் கீப்பர் டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்தார், அது நோபால் என்று கூறினார் எஸ்.ரவி, ஆனால் அது நோ-பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லாதது என்று ரீப்ளேயில் தெரிந்தது. ஏகப்பட்ட நோ-பால்களை தவற விட்ட நடுவர்கள் திடீரென விழிப்புற்று நோ-பால் இல்லாததை நோ-பால் என்று தீர்ப்பளித்தனர். கேப்ரியல் பந்தில் வோக்ஸ் பவுல்டு ஆனதும் நோ-பால் ஆனது, ஆனால் இதுவும் நோ-பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லாததுதான்.

மே.இ.தீவுகளின் பீல்டிங்கும் இங்கிலாந்தின் வலுவான நிலைக்குப் பொறுப்பாகும், கேட்ச்களை விட்டுக் கொண்டேயிருந்தனர். ரூட், மலான், என்று அனைவருக்குமே ஏதாவது ஒரு கேட்சைக் கோட்டை விட்ட வண்ணமே இருந்தனர்.

மீண்டும் வெற்றி வாய்ப்பை மே.இ.தீவுகள் தவறவிட்டதாகவே தெரிகிறது, ஆனாலும் கிரிக்கெட் ஆட்டம் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் எனவே ஒரு அரிய வெற்றி தகைந்தாலும் தகையலாம், ஆனால் மிக மிக கடினம் என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x