உலக தடகளம்: ஈட்டி எறிதல் இறுதிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் காங் சாதனை: சோப்ரா ஏமாற்றம்

உலக தடகளம்: ஈட்டி எறிதல் இறுதிக்கு முன்னேறி தேவிந்தர் சிங் காங் சாதனை: சோப்ரா ஏமாற்றம்
Updated on
1 min read

லண்டனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் ஈட்டி எறிதலில் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்தார் இந்திய வீரர் தேவிந்தர் சிங் காங்.

நீரஜ் சோப்ராதான் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை அறியப்படாத தேவிந்தர் சிங் காங் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நீரஜ் சோப்ரா ஏமாற்றமளித்தார்.

எந்த ஒரு உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஈட்டி எறிதலில் ஆடவர் பிரிவில் இறுதிக்கு எந்த இந்திய வீரரும் இதுவரை முன்னேறியதில்லை, அவ்விதத்தில் தேவிந்தர் சிங் காங் முதல் சாதனை படைத்தார்.

கடந்த ஜூன் மாதம் மரிஜுவானா போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாக சோதனையில் தெரியவந்ததையடுத்து தேவிந்தர் சிங் காங் பங்கேற்பு சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பெருமை சேர்த்துள்ளார்.

ஜூனியர் உலக சாம்பியன் நீரஜ் சோப்ராதான் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்டது. தகுதி பெறத் தேவையான 83 மீ இலக்கை இவர் எட்டுவார் என்ற நம்பிக்கையே இல்லாத தருணத்தில் தனது 3-வது, இறுதி த்ரோவில் காங் சற்றும் எதிர்பாராதவிதமாக 84.22மீ தூரம் விட்டெறிந்தார்.

மாறாக சோப்ராவால் தகுதி பெறத் தேவையான 83மீ தூரம் வீச முடியாமல் 82.26மீ தூரமே வீச முடிந்தது.

இந்நிலையில் தேவிந்தர் சிங் காங் கூறும்போது, “நீரஜ் தகுதி பெறவில்லை என்று எனக்குத் தெரிய வந்தபோது நான் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவது என முடிவெடுத்து ஆடினேன். நாட்டுக்காக ஏதாவது செய்ய நினைத்தேன். இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாததை செய்ய முனைந்தேன். கடவுள் அருளில் நாட்டுக்காக இதனைச் சாதித்தேன்” என்றார்.

முதல் இரண்டு த்ரோக்களில் காங் முறையே 82.22 மீ மற்றும் 82.14 மீ தூரமே விட்டெறிந்தார். 3-வது இறுதி எறிதலில் சட்டென உத்வேகம் பெற்ற காங் 84.22 மீ தூரம் விட்டெறிந்து இறுதிக்குள் நுழைந்தார். இதனையடுத்து இறுதிச் சுற்றில் தகுதி பெற்றவர்களில் 7-வது இடத்தில் உள்ளார் காங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in