Published : 04 Aug 2017 06:17 PM
Last Updated : 04 Aug 2017 06:17 PM

அஸ்வின், சஹா, ஜடேஜா அரைசதங்களுடன் இந்தியா 622 ரன்கள்; இலங்கை திணறல்

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி அஸ்வினிடம் தரங்கா, கருணரத்ன ஆகியோரை இழந்து ஆட்ட முடிவில் 50 ரன்கள் எடுத்துள்ளது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், சந்திமால் 8 ரன்களுடனும் நாளை (சனிக்கிழமை) ஆட்டத்தை தொடர்வார்கள்.

இன்று காலை புஜாரா, ரஹானே மேலும் தொடராமல் வெளியேறினர், கருண ரத்னேயின் பந்தை தவறான லைனில் ஆடி எல்.பி.ஆனார் புஜாரா. ரஹானே அறிமுக இடது கை ஸ்பின்னர் புஷ்பகுமாராவை இறங்கி வந்து ஆட முயன்று ஏமாந்து ஸ்டம்ப்டு ஆனார், இலங்கை வீசிய அரிய நல்ல பந்துகளில் இதுவும் ஒன்று.

அதன் பிறகு சஹா 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார், அஸ்வின் ஹெராத்தை மேலேறி வந்து அடித்த சிக்ஸ் மூலம் அரைசதம் கண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 20 ரன்கள் என்று புஷ்பகுமாராவிடம் வீழ்ந்தார். கடைசியில் ஜடேஜா 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 85 பந்துகளில் 70 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், மொகமது ஷமி மிகப்பெரிய 2 சிக்சர்களுடன் 8 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தில் தரங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உமேஷ் யாதவ் தன் பங்குக்கு 8 ரன்கள் எடுத்தார். வருவோர் போவோர் எல்லாம் அரைசதம் எடுக்கும் விதமாக இலங்கை பந்துவீச்சு அமைந்தது. டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னால் கூட இலங்கை இவ்வளவு மோசமாக ஆடியதில்லை என்பதாக நினைவு.

மொத்தம் 158 ஓவர்கள் இலங்கையை களத்தில் காயப்போட்டு வறுத்தெடுத்த இந்திய அணி 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பிறகு இலங்கை அணி 20 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அஸ்வின் புதிய பந்தில் வீசினார், உபுல் தரங்காவுக்கு வீசியது அவரது மோசமான பந்து என்றால் அது மிகையாகாது. ரவுண்ட் த விக்கெட்டில் வந்து லெக் ஸ்டம்பில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார், அதனை திரும்பிக்கொண்டு வெளு வெளுக்காமல் தரங்கா குறிபார்த்து ஷார்ட் லெக் திசையில் ராகுல் கையில் அடித்து ஸ்கோரரை தொந்தரவு செய்யாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார், குழந்தைத் தனமான பந்துக்கு குழந்தைத்தனமான ஒரு ஆட்டம்!

பந்துகள் பிட்ச் ஆகி திரும்பத் தொடங்கின, புதிய பந்து என்பதால் பிட்சிலிருந்து சறுக்கிக் கொண்டு வந்ததோடு எழும்பவும் தொடங்கின அஸ்வினுக்கு. இதனால் 25 ரன்களில் கருணரத்ன ஸ்லிப்பில் ரஹானேயிடம் எட்ஜ் செய்ய நேரிட்டது, ரவுண்ட் த விக்கெட்டில் உள்ளே வந்த பந்து பிறகு வெளியே திரும்பியது இதனால் எட்ஜ் ஆனது.

இலங்கை அணி 572 ரன்கள் பின் தங்கியுள்ளது. அஸ்வின் 10 ஓவர்கள் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள். அஸ்வினை முதலில் பேட்டிங்கில் அரைசதம் அடிக்கவிட்டது, பிறகு உபுல் தரங்கா மட்டமான பந்தில் மட்டமாக ஆட்டமிழந்து அஸ்வினை உசுப்பேற்றியது இலங்கை அணிக்கு மோசமான தோல்வியைப் பெற்றுத்தராமல் செய்ய நாளை சந்திமால், மெண்டிஸ் ஏதாவது செய்தாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x