Last Updated : 10 Aug, 2017 06:49 PM

 

Published : 10 Aug 2017 06:49 PM
Last Updated : 10 Aug 2017 06:49 PM

என் நிறத்தை வைத்து பலர் கேலி பேசியதால் அவமானங்களை சந்தித்துள்ளேன்: அபினவ் முகுந்த் வேதனை

நிறபேதம் காரணமாக நிறைய அவமானங்களை சந்தித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அபினவ் முகுந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், உடலின் நிறத்தைக் குறிவைத்து வலைதளப் பக்கத்தில் சிலர் பதிவுகளை வெளியிடுவதால் தான் மிகவும் ஏமாற்றமும் வருத்தமும் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நான் 10 வயது முதல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேன். படிப்படியாக வளர்ந்து இன்று இந்தியாவுக்காக ஆடும் அளவுக்கு உயந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன். நான் யாருடைய கவனத்தையும், அனுதாபத்தையும் பெறுவதற்காக இதை எழுதவில்லை. என்னை பாதித்த ஒரு விஷயத்தில் மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். என் 15-ம் வயது முதல் நான் நாட்டுக்குள்ளும், வெளியிலும் பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளேன். சிறு வயது முதல் என் நிறம் குறித்த மக்களின் பார்வை எனக்கு புதிராகவே இருந்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டுக்காக நான் பல நாட்கள் வெயிலிலேயே இருந்திருக்கிறேன். மேலும் நான் வெயில் அதிகமாக உள்ள சென்னையைச் சேர்ந்தவன். கிரிக்கெட் ஆடுவதற்காகவும், பயிற்சி மேற்கொள்வதற்காகவும் வெயிலில் மைதானத்திலேயே நின்றிருந்ததால் என் நிறம் குறைந்திருக்கலாம். அதற்காக நான் என்றுமே வருத்தப்பட்டதில்லை.

ஆனால் என் நிறத்தை வைத்து மற்றவர்கள் என்னைப் பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். கிண்டல் செய்துள்ளனர். இதைப்பற்றியெல்லாம் நான் பெரிதாக கவலைப்பட்டதில்லை. என் லட்சியம் பெரியதாக இருப்பதால் அவர்கள் அப்படி செய்வதற்கு எதிர்வினை ஆற்றியதில்லை. சாதாரணமாக சிரித்துவிட்டு கடந்துவிடுவேன். இது எந்த வகையிலும் என் லட்சியத்தைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டேன். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இந்தப் போக்கு இன்னும் மோசமாகியுள்ளது. நிறத்தை மையப்படுத்தி பல பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுகின்றன.

இன்று நான் எனக்காக மட்டும் இதைப் பேசவில்லை. தங்கள் உடல் நிறம் காரணமாக ஏளனங்களை சந்திக்கும் ஏராளமான மக்களுக்காக பேசுகிறேன். நிறம் மட்டுமே அழகான விஷயம் அல்ல. உண்மையாக இருங்கள். உங்கள் லட்சியங்களில் கவனமாக இருங்கள். உங்கள் நிற விஷயத்தில் சவுகரியமாக இருங்கள்.

இவ்வாறு அபினவ் முகுந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயத்துக்கும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வலைதளத்தில் நிறத்தை வைத்து மற்றவர்களை விமர்சிப்பவர்களைக் குறித்தே தான் அப்படி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x