Published : 14 Aug 2017 07:02 PM
Last Updated : 14 Aug 2017 07:02 PM

தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து

இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார்.

அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது,

“நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவரது டென்னிஸ் வாழ்க்கை உண்மையில் 30-வயதில்தான் தொடங்கியது. அதுவரை 2 அல்லது 3 முறை வென்றிருப்பார். ஆனால் அதன் பிறகுதான் அவரது ஆட்டம் களைகட்டியது. அவரும் ஊடக அழுத்தத்திற்கு ஆளானார். ’எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டேயிருந்தனர், ஆனால் அவர் 36 வயது வரை ஆடி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். எனவே யாரும் எதுவும் கூறமுடியாது. நமக்குத் தெரியாது. எனவே ஆட்டோமேட்டிக் என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி நன்றாக ஆட வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். அவர் பங்களிப்பு செய்ய முடியும் போது ஏன் அவர் நீடிக்கக் கூடாது? அப்படியில்லையெனில் மாற்றுகளை பரிசீலிக்கலாம்.

தோனி மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பற்றியும் விவாதிப்போம், அணிச்சேர்க்கை என்று வரும்போது அனைவரையுமே விவாதிப்போம்” என்றார்.

2019 உலகக்கோப்பையில் தோனி பற்றி எவ்வளவு தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்ற கேள்விக்கு பிரசாத், “நாம் பார்ப்போம், பார்ப்போம். அவர் ஒரு லெஜண்ட், ஆனாலும் எங்களிடம் திட்டம் உள்ளது.

ரிஷப் பந்த்தை பொறுத்தவரையில் எதிர்காலத்திற்காக பார்க்கப்பட வேண்டிய வீரர் ஆவார். அவரை ஏ தொடர்களில் வளர்த்தெடுத்து வருகிறோம். தென் ஆப்பிரிக்கா ஏ தொடருக்கு அவர் சென்றார், ஆனால் அங்கு அவரது ஆட்டம் சாதாரணமாக இருந்தது. அதற்காக அவர் தேர்வுப் பரிசீலனையில் இல்லை என்று அர்த்தமல்ல. இன்னொரு ஏ தொடர் வருகிறது, ரிஷப் பந்த் டி20 வீரர் என்பதையும் கடந்தவர் என்பதை அறிவோம், எனவே அவரை எப்போதும் பரிசீலிப்போம்.

என் இதயத்தில் கை வைத்துச் சொல்ல வேண்டுமெனில் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகே வலுவான அணி வேண்டுமென்றே நாங்கள் அனைவரும் கருதினோம். நம் அணியினர் உடல்தகுதியை மேலும் வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். பீல்டிங் தரத்தை முன்னேற்ற வேண்டும். 2019 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யும் முன் 2-3 அளவுகோல்களை வைத்துள்ளோம். எனவே இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யாத வீரர்கள் 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. அது யாராக இருந்தாலும் சரி.

ஏ அணி மட்டத்தில் ராகுல் திராவிடை பயிற்சியாளராக அடைந்தது ஆசீர்வாதம்தான். அவர் முழுதும் தயாரான வீரர்களை இந்திய அணிக்காக ஏ அணியிலிருந்து அளித்து வருகிறார். வரும் வீரர்கள் நேரடியாக அணியுடன் இணைந்து செயல்பட முடியும். ராகுல் திராவிடை நியமித்ததன் ஒட்டுமொத்த பெருமையும் பிசிசிஐ-யே சாரும். ராகுல் திராவிட் நாள் முழுதும் வீரர்களுக்கு பந்துகளை வீசி பயிற்சி அளித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன், தன்னிடமே அனைத்துப் பொறுப்பையும் வைத்துள்ளார். அந்த மட்டத்தில் ராகுல் திராவிட் போல் ஒருவர் கிடைத்திருப்பது அதிர்ஷ்டமே.

இவ்வாறு கூறினார் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x