Published : 26 Aug 2017 08:15 AM
Last Updated : 26 Aug 2017 08:15 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையான சன் யுவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து முதல் செட்டை 21 - 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

முதல் செட்டை இழந்ததால் சீன வீராங்கனையான சன் யு சோர்ந்து போனார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சிந்து, 2-வது செட்டில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். அவரது வேகத்துக்கு முன்னால் சீன வீராங்கனையால் ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் 2-வது செட்டை சிந்து கைப்பற்றினார்.

இதன்மூலம் 21-14, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து, அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பதக்கம் வெல்வது உறுதியாகி விட்டது.

மகளிர் பிரிவில் வெற்றி பெற்றாலும், ஆண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து ஆடினார். இதற்கு முன்னர் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் மற்றும் ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் போட்டிகளில் சன் வான் ஹோவை ஸ்ரீகாந்த் வீழ்த்தியிருந்ததால் இப்போட்டியிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக நேற்று ஸ்ரீகாந்துக்கு சன் வான் ஹோ, கடும் சவாலாக விளங்கினார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் ஸ்ரீகாந்த் சில தவறுகளைச் செய்ய முதல் செட்டின் ஆரம்பத்திலேயே சன் வான் 6-1 என்ற முன்னிலையைப் பெற்றார். ஆனால் விடாமல் போராடிய ஸ்ரீகாந்த், ஒரு கட்டத்தில் சன் வானுக்கு நெருக்குதல் கொடுத்து 8-8 என்று புள்ளிகளைச் சமன் செய்தார். ஆனால் அதன் பிறகு தன் சிறப்பான பிளேசிங்குகளால் ஸ்ரீகாந்தை திணறடித்த சன் வான், முதல் செட்டை 21- 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

2-வது செட்டில் ஸ்ரீகாந்த் கடுமையாக போராடினாலும், அவரால் சன் வானை வீழ்த்த முடியவில்லை. இந்த செட்டையும் 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சன் வான் கைப்பற்றினார். இதன் மூலம் சன் வான் 21-14, 21-18 என்ற செட்கணக்கில் வென்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 49 நிமிடங்கள் நீடித்தது.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய சன் வான், “உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக நான் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுகிறேன். இதனால் இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x