

நாட்டில் உள்ள தலைசிறந்த பயிற்சியாளர்களின் நலனை காக்க மத்திய அரசு தவறினால், உலகத்தரம் வாய்ந்த அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவது கடினம் என இந்திய பாட்மிண்டன் தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் எச்சரித்துள்ளார்.
ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் ஏராளமான திறமைசாலிகளும், திட்டங்களும் இருந்தாலும்கூட, அதை முறையாக செயல்படுத்துவதும், வீரர்கள் மத்தியில் ஒழுக்க நெறிகளை கொண்டு வருவதும் முக்கியமானது. ஆனால் அதை செய்வது கடினமானது.
அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணி. ஒட்டுமொத்த கட்டமைப்பின் ஒரு பகுதிதான் உள்கட்டமைப்பு வசதிகள். அது ஒரு பிரச்சினையே இல்லை. வீரர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு அர்ப்பணிப்பு உணர்வோடும், ஊக்கத்தோடும் செயல்பட வேண்டும். அதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். அதனால் அது மிகக் கடினமான பணியாகும்.
பயிற்சியாளர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில் யாரும் பயிற்சியாளர் பணியை செய்வதற்கு முன்வர மாட்டார்கள். தலைசிறந்த பயிற்சியாளர்கள் இல்லாமல், தலைசிறந்த வீரர்களை உருவாக்க முடியாது. தற்போதைய தருணத்தில் நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், பயிற்சியாளர்களை மோசமாக நடத்தும் நிலைமையை மாற்றுவதுதான். அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 60 பதக்கங்களை வென்றது. ஆனால் அதற்கு காரணமான எத்தனை பயிற்சியாளர்களின் பெயர் நமக்கு தெரியும்? தலைசிறந்த பயிற்சியாளர்களை உருவாக்காவிட்டால், தலைசிறந்த அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க முடியாது.