Published : 01 Aug 2017 10:30 AM
Last Updated : 01 Aug 2017 10:30 AM

யு மும்பா அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றிப்பாதைக்கு திரும்புமா தெலுகு டைட்டன்ஸ் அணி; மற்றொரு ஆட்டத்தில் குஜராத் - டெல்லி மோதல்

புரோ கபடி லீக் 5-வது சீசனில் தெலுகு டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்த நிலையில் தனது 4-வது ஆட்டத்தில் இன்று முன்னாள் சாம்பியனான யு மும்பா அணியுடன் மோதுகிறது. இரவு 9 மணிக்கு ஹைதராபாத் கச்சிபவுலி உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ராகுல் சவுத்ரி தலைமையிலான தெலுகு டைட்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 32-27 என்ற கணக்கில் வீழ்த்திய தெலுகு டைட்டன்ஸ் அடுத்த ஆட்டத்தில் பாட்னா அணியிடம், 29-35 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடைசியாக பெங்களூரு அணியுடன், தெலுகு டைட்டன்ஸ் மோதியிருந்தது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 31- 21 என்ற புள்ளிக்கணக்கில் டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்து வெற்றிபெற்றது. பெங்களூரு அணி கேப்டன் ரோஹித் 10 பேரை அவுட்டாக்கி சூப்பர் டென் சாதனையை செய்தார். டைட்டன் அணிக்கு ஒரு ஆறுதலாக அதன் கேப்டன் ராகுல் சவுத்ரி புரோ கபடி லீக்கில் தனது 500-வது ரைடு பாயின்ட் எடுத்து புதிய சாதனை படைத்தார்.

இந்நிலையில் தெலுகு அணி தனது 4-வது ஆட்டத்தில் இன்று யு மும்பா அணியுடன் மோதுகிறது. அனுப் குமார் தலைமையிலான யு மும்பா அணி முதல் ஆட்டத்தில் 21-33 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் தனது அடுத்த ஆட்டத்தில் அறிமுக அணியான ஹரியாணாவை 29-28 என்ற கணக்கில் வென்றது.

முதல் பாதியில் பின்தங்கிய நிலையில் இருந்த மும்பா அணிக்கு, 2-வது பாதியில் அந்த அணியின் வீரர் காசிலிங் அடாகே சூப்பர் ரெய்டில் 3 புள்ளிகள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். இதன் பின்னரே மும்பா அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடிந்தது. காசிலிங் அடாகே 7 ரைடு புள்ளிகள் சேர்த்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த வெற்றியால் யு மும்பா அணியின் தன்னம்பிக்கை அதிரித்துள்ளது. அதேவேளையில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்துள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. அந்த அணி, ராகுல் சவுத்ரியின் திறனை மட்டுமே பெரிதும் நம்பி இருப்பது சற்று பலவீனமாக உள்ளது. இதை கடந்த இரு ஆட்டங்களிலும் காண முடிந்தது. இதனால் அந்த அணி தனது திட்ட வியூகங்களை இன்றைய ஆட்டத்தில் மாற்றக்கூடும்.

முன்னதாக 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத், டெல்லி அணியை எதிர்கொள்கிறது. டெல்லிக்கு இது 2-வது ஆட்டம். அந்த அணி முதல் ஆட்டத்தில் 30-26 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வென்றிருந்தது. அந்த அணிக்கு கேப்டனான ஈரானைச் சேர்ந்த மீரஜ் ஷேக், அபுல் பாஸல் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x