Published : 08 Aug 2017 07:21 PM
Last Updated : 08 Aug 2017 07:21 PM

டிவில்லியர்ஸ் பற்றிய சிந்தனைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்: கேப்டன் டுபிளெசிஸ் கருத்து

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 1-3 என்று இழந்ததையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கு ஏ.பி.டிவில்லியர்ஸ் எப்போது திரும்புவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்துள்ளதையடுத்து டிவில்லியர்ஸ் திரும்புவது அரிது அவரைப்பற்றி யோசிப்பதிலிருந்து நாம் விடுபடுவது நல்லது என்று டுபிளெசிஸ் கூறியுள்ளார்.

“டிவில்லியர்ஸ் விளையாடுவதை நானும் விரும்புகிறேன். அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அவர் இல்லாமல் வாடுகிறோம் என்பது உண்மைதான், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு எப்போது திரும்புவார் என்ற யோசனையில் நாம் நிறைய நேரத்தை வீண் செய்கிறோம். அவரது இடத்தில் வேறு ஒருவர் வேண்டும், அந்த மாற்று வீரரை நாம் தேட வேண்டும். ஏபி வந்தாரென்றால் அது பெரிய போனஸ். ஆனால் அவர் டெஸ்ட் அணிக்குத் திரும்புவார் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

டிவில்லியர்ஸ் 19 மாதங்களுக்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங்கில் 4-ம் நிலையில் டிவில்லியர்ஸுக்கு பதிலாக டுமினி, பவுமா, டி காக் என்று தென் ஆப்பிரிக்க அணி களமிறக்கிப் பார்த்தது. டிகாக் இதில் பாரம்பரிய கிரிக்கெட் அணுகுமுறைத் தேவைப்படும் சூழலில் எடுபடாமல் போனார், இதனையடுத்தே தெம்பா பவுமாவுக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டுபிளெசிஸ் கூறும்போது, “டுமினியை நீக்கும் எண்ணத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை. அவர் பந்து வீசுவார் மேலும் பேட்டிங்கில் திடீரென எதிர்பாராததை அவரால் செய்ய முடியும் என்றே நம்பினோம். டி காக்கை 4-ம் நிலையில் இறக்கியதற்குக் காரணம் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கவே. 2-வது டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய இன்னிங்சை அவர் ஆடினார். ஆனால் சீரான ஆட்டம் என்பதைக் கொண்டு பார்க்கும் போது 4-ம் நிலை வீரர்கள் அணியின் தேவைக்கேற்ப ஆடுவது முக்கியமாகிறது. இங்கு பந்துகள் ஸ்விங் ஆகும் நிலையில் ஸ்டோக்ஸ், அலி, பேர்ஸ்டோ போல் டி காக் 6-ம் நிலையில் களமிறங்குவதே சரி என்று பட்டது.

தெம்பா பவுமா, நான், ஆம்லா போன்று உத்தி ரீதியாக வலுவானவர். அவர் எங்கள் அணியின் முக்கியத் தலைவராக வருவார் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x