Published : 12 Jul 2017 10:24 AM
Last Updated : 12 Jul 2017 10:24 AM

விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் நுழைந்தார் முகுருசா- ஆடவர் பிரிவில் ஜோகோவிச் அசத்தல்

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா அரை இறுதிக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் கால் இறுதியில் கால்பதித்தார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 8-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் கடைசி 4-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முன்தினம் நடைபெற இருந்த இந்த ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 51-ம் நிலை வீரரான பிரான்சின் அட்ரியன் மானாரினோவை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

3 முறை சாம்பியனான ஜோகோவிச், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இது 9-வது முறையாகும். இந்த சுற்றில் அவர், 11-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமர் பெர்டிச்சுடன் மோதுகிறார்.

இதற்கிடையே ஜோகோவிச் தோள்பட்டை காயத்தால் அவதிக்கு உள்ளாகி உள்ளார். நேற்றைய ஆட்டத்தின் முதல் செட் மற்றும் 3-வது செட்டின்போது வலது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட வலிக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் கால் இறுதியில் அவரால் முழு திறனையும் வெளிப்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் குஸ்நெட்சோவா, 15-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முகுருசா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதியில் 10-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் லத்வியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார்.

50-வது கால் இறுதி

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 7-6 (7-1), 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 46-ம் நிலை வீரரான பிரான்சின் பெனோயிட் பேரை வீழ்த்தினார். இதன் மூலம் 10-வது முறையாக கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் முர்ரே.

கால் இறுதியில் முர்ரே, 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரியை எதிர்கொள்கிறார். 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பெடரர் கால் இறுதிக்கு முன்னேறு வது இது 50-வது முறையாகும். விம்பிள்டனில் அவர், 15-வது முறையாக கால் இறுதியில் கால் பதித்துள்ளார். கால் இறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை சந்திக்கிறார் பெடரர்.

ரயோனிக் கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் பெடரரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 6-ம் நிலை வீரரான ரயோனிக் தனது 4-வது சுற்றில், 10-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவை 4-6, 7- 5, 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் பிளிப்கென்ஸ் ஜோடி, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ், சீனாவின் யங் ஜன் ஷான் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 71 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x