Last Updated : 26 Jul, 2017 09:48 AM

 

Published : 26 Jul 2017 09:48 AM
Last Updated : 26 Jul 2017 09:48 AM

ஒவ்வொரு இந்திய வீரருக்கும் திட்டம் வைத்துள்ளோம்: ரங்கனா ஹெராத்

ஒவ்வொரு இந்திய வீரருக்கும் திட்டம் வைத்துள்ளோம் என இலங்கை அணியின் கேப்டன் ரங்கனா ஹெராத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று மோதுகிறது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இலங்கை அணியின் கேப்டன் ரங்கனா ஹெராத் கூறியதாவது:

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நாங்கள் 380 ரன்களை துரத்தி வெற்றி பெற்றிருந்தோம். ஆனால் இந்தியாவும், ஜிம்பாப்வேயும் வெவ்வேறு அணிகள். நாங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறோம். அதனால் எந்த ஒரு வெற்றியும் வீரர்களுக்கு நம்பிக்கையையே கொடுக்கும். தற்போதைய நிலையில் இந்தியா நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள்.

இதனால் இந்த தொடர் எங்களுக்கு சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் இருக்கும். நாங்கள் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும். சொந்த மண் சாதகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதே நேரத்தில் இரு அணியிலும் உள்ள வித்தியாசமான திறன்களையும் பார்க்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே எங்களது அணித் தேர்வு இருக்கும். இதுவரை நாங்கள் அதிக அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டே விளையாடி உள்ளோம்.

ஆனால் தற்போது நம்பர் ஒன் அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். இதனால் எங்களுக்கு பொறுப்பு உள்ளது. தினேஷ் சந்திமால் விளையாடாதது எங்களுக்குப் பெரிய இழப்பு. கேப்டன் அல்லது வீரராக சந்திமால் 100 சதவீத பங்களிப்பை அணிக்கு அளிக்கக்கூடியவர். எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பந்து வீச்சில் மலின்டா புஷ்பகுமாரா என்னை மிஞ்சலாம். இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர், முதல்தர கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி உள்ளார். இந்த புள்ளி விவரங்களே புஷ்பகுமாரா சிறந்த பந்து வீச்சாளர் என்பதை உணர்த்தும்.

எதிர்காலத்தில் நான் ஓய்வு பெறுகிறேனோ, இல்லையோ நிச்சயம் புஷ்பகுமாரா சுழற்பந்து வீச்சாளர் தேர்வுக்கான விருப்பமாக இருப்பார். காலே டெஸ்ட்டில் அவர் களமிறங்குவது உறுதி செய்யப்படவில்லை.

நாங்கள் இரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க முடிவு செய்தால் புஷ்பகுமாரா வாய்ப்பு பெறுவார். கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான காலே டெஸ்ட்டில் சந்திமால் 160 ரன்களுக்கு மேல் குவித்தார். நானும் சில விக்கெட்களை கைப்பற்றினேன். ஆனால் இம்முறை இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது.

திட்டம்

கடந்த காலங்களில் நிகழ்ந்ததை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மற்றொரு புதிய தொடரை தொடங்குகிறோம். சிறப்பாக தொடங்க வேண்டும், குறிப்பாக முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு இந்திய வீரருக்கும் திட்டம் வைத்துள்ளோம். காலே ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன். இரு அணிகளுக்குமே இது உதவும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.

முதல் இரு நாட்களில் பந்துகள் அதிகளவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என கருதவில்லை. கடைசி இரு நாட்கள் சாதகமாக இருக்கலாம்.இவ்வாறு ஹெராத் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x