இலங்கை டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக முரளி விஜய் விலகல்: ஷிகர் தவண் அணியில் சேர்ப்பு

இலங்கை டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக முரளி விஜய் விலகல்: ஷிகர் தவண் அணியில் சேர்ப்பு
Updated on
1 min read

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தொடக்க வீரரான முரளி விஜய் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக ஷிகர் தவண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு முரளி விஜய், லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடவில்லை. 33 வயதான முரளி விஜய், அறுவை சிகிச்சைக்கு பிறகு பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு மீண்டும் மணிக்கட்டு பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவண் கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் வரும் 26-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. -ஏஎப்பி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in