Published : 19 Jul 2017 10:00 AM
Last Updated : 19 Jul 2017 10:00 AM

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமனம்

ஜாகீர் கான், ராகுல் திராவிட் ஆகியோரது நிலை என்ன என்பதற்கு தெளிவான பதில் அளிக்காத பிசிசிஐ, ரவி சாஸ்திரி விருப்பத்துக்கு ஏற்ப பாரத் அருணை பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் சஞ்சய் பாங்கரை பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரவி சாஸ்திரியுடன் பாரத் அருண், சஞ்சய் பாங்கர் ஆகியோர் உலகக்கோப்பை வரை பயிற்சியாளர்களாக நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2016 ஜூன் மாதம் வரை ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக இருந்தபோது பாரத் அருண் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு ஜாகீர் கான், ராகுல் திராவிட்டை ஆலோசகர்களாக நியமித்திருந்தது. ஆனால் இதற்கு பிசிசிஐ நிர்வாகக்குழு அனுமதி அளிக்கவில்லை. கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிந்துரையை மட்டுமே வழங்கி உள்ளது. எந்தவித சம்பள ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

துணை பயிற்சியாளர்களை நியமிப்பது தொடர்பாக ரவி சாஸ்திரியுடன் ஆலோசனை நடத்த டயானா எடுல்ஜி உட்பட 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ரவி சாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்த பின்னரே துணை பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து முடிவு செய்யப்படும் என அதிரடியாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.

இதற்கிடையே ரவிசாஸ்திரி மீது திராவிட், ஜாகீர் கான் ஆகியோரை திணிக்கவில்லை என்று கங்குலி அடங்கிய ஆலோசனைக்குழு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ நடவடிக்கைக்கு முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரா குஹாவும் அதிருப்தி தெரிவித்திருந்தார். அனில் கும்ப்ளே அவமானப்படுத்தப்பட்டது போன்று ஜாகீர்கானும், ராகுல் திராவிட்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் உதவி பயிற்சியாளர்கள் நியமனம் தொடர்பாக, பிசிசிஐ நிர்வாகக்குழு நியமித்த 4 பேர் கொண்ட குழுவை நேற்று மும்பையில் ரவி சாஸ்திரி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பாரத் அருணை பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் சஞ்சய் பாங்கரை பேட்டிங் பயிற்சியாளராகவும், ஸ்ரீதரை பீல்டிங் பயிற்சியாளராகவும் நியமித்து பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

ரவி சாஸ்திரி கூறும்போது, “என்னுடைய குழுவில் யார் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன், இதைத்தான் இப்போது நீங்கள் அறிவிப்பாகக் கேட்டுள்ளீர்கள். ஜாகீர் கான், திராவிட் ஆகியோர் எத்தனை நாட்கள் அணியுடன் பயணிப்பார்கள் என்பதை பொறுத்து முடிவெடுக்கப்படும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. அணிக்காக அவர்கள் எவ்வளவு ஆலோசனைகளை வழங்க முடியும் என்பது மதிப்பு மிக்கது.

அவர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள். நான் அவர்களிடமும் இது குறித்து பேசிவிட்டேன். எனவே இதில் எந்தவித சிக்கல்களும் இல்லை. கிரிக்கெட் ஆலோசனை குழுவுக்கு நன்றி. இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். என்னை இதற்கு பொருத்தமானவர் என்று முடிவெடுத்த அந்த குழுவுக்கு என் நன்றிகள்” என்றார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x