Last Updated : 11 Jul, 2017 10:37 AM

 

Published : 11 Jul 2017 10:37 AM
Last Updated : 11 Jul 2017 10:37 AM

வாய்ப்புகளை தவறவிட்டால் வெற்றி பெற முடியாது: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் அணியை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. பேட்டிங், பந்துவீச்சில் மந்தமாக செயல்பட்டால் வெற்றி பெறத் தகுதியானவர்களாக இருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 ஆட்டம் கொண்ட தொடரில் இந்தியா மோதியது. ஜமைக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 48, விராட் கோலி 39, ரிஷப் பந்த் 38, ஷிகர் தவண் 23, தோனி 2, கேதார் ஜாதவ் 4 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 4, அஸ்வின் 11 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜெரோம் டெய்லர், கெஸ்ரிக் வில்லியம் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

விராட் கோலி, ஷிகர் தவண் ஜோடி 5.3 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஆனால் இளம் வீரரான ரிஷப் பந்த் பந்துகளுக்கு நிகராக ரன்கள் சேர்த்தது பெரிய சுணக்கத்தை ஏற்படுத்தியது. மிகவும் தடுமாறிய அவர் 35 பந்துகளை எதிர்கொண்டே 38 ரன்கள் சேர்த்திருந்தார்.

16 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்திருந்த இந்திய அணி கடைசி 4 ஓவர்களில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறியது. கடைசி 6 ஓவர்களில் இந்திய அணி வீரர்களால் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது.

191 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 194 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான எவின் லீவிஸ் 62 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் விளாசினார். மர்லான் சாமுவேல்ஸ் 29 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டித் தொடரில் அடைந்த தோல்விக்கு ஆறுதல் தேடிக் கொண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

125 ரன்கள் விளாசிய எவின் லீவிஸ், ஒருநாள் போட்டித் தொடரில் படுமந்தமாக விளையாடினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் மொத்தம் 121 பந்துகளை சந்தித்து வெறும் 67 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் அவரிடம் இருந்து வெளிப்பட்ட ஆட்டம் பிரமிக்கும் வகையிலேயே இருந்தது.

அதிலும் அவர் கொடுத்த கேட்ச்களை இரு முறை இந்திய வீரர்கள் கோட்டைவிட்டனர். 46 ரன்களில் இருந்த போது மொகமது ஷமியும், 55 ரன்களில் இருந்த போது தினேஷ் கார்த்திக்கும் கேட்ச்சை தவறவிட்டனர். இதன் விளைவு ஆட்டத்தின் முடிவை மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தாரை வார்த்தது போன்று ஆகிவிட்டது.

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

பேட்டிங்கில் நாங்கள் 25 முதல் 30 ரன்களை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். நிச்சயம் 230 ரன்களை எடுக்கும் நிலையிலேயே இருந்தோம். பீல்டிங்கில் சில கேட்ச்களை தவறவிட்டோம். வாய்ப்புகளை தவறவிடும்போது, வெற்றி பெறத் தகுதியானவர்களாக இருக்க முடியாது.

நல்ல தொடக்கம் கிடைக்கும் போது ஒரு பேட்ஸ்மேனாவது அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 ஆட்டத்தைப் பொறுத்தவரையில் 80 முதல் 90 ரன்கள் வரை சேர்க்கும் ஒரு பேட்ஸ்மேன் தேவை என்றே கருதுகிறேன்.

பந்து வீச்சை நாங்கள் சிறப்பாக தொடங்கவில்லை மற்றும் பீல்டிங் கும் சரியாக அமையவில்லை. நிலைமைக்கு தகுந்தபடி வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இதுபோன்ற ஆட்டங்கள் சிறந்த தீனியாக அமையும்.

டி20-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறந்த அணியைக் கொண்டுள்ளது. இரு வருடங் களாக அவர்கள் ஒரே அணியைக் கொண்டுள்ளது பலமாக உள்ளது. நாங்கள் பரிசோதனை (புதிய வீரர்களுக்கு வாய்ப்பு) நிலையில் உள்ளதால் சில ஏற்றத் தாழ்வுகளைக் கண்டு வருகிறோம்.

ஒருநாள் போட்டித் தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தோம். மற்ற 3 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றி உள்ளோம். டி20-ல் ஒரு ஆட்டத்தை மட்டும் வைத்து எதுவும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக மேற்கிந்தியத் தீவுகள் தொடரை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

லீவிஸ் படைத்த சாதனைகள்

# சர்வதேச டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கலம் ஆகியோருக்கு அடுத்தபடியாக 2-வது முறையாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை எவின் லீவிஸ் பெற்றுள்ளார். அவர் அடித்துள்ள இரு சதங்களுமே இந்தியாவுக்கு எதிரானது தான்.

# சர்வதேச டி20 ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற சாதனைக்கும் உரியவர் ஆனார் எவின் லீவிஸ். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 117 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த சாதனையை தற்போது லீவிஸ் 125 ரன்கள் சேர்த்து முறியடித்துள்ளார்.

# ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் லீவிஸ் சேர்த்த 125 ரன்கள் 3-வது அதிகபட்ச ஸ்கோராக பதிவாகி உள்ளது. இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 156, மேக்ஸ்வெல் 145 ரன்கள் சேர்த்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.

# இலக்கைத் துரத்திய ஆட்டங்களில் ஒரு பேட்ஸ்மேனின் அதிக பட்ச ரன் குவிப்பாகவும் எவின் லீவிஸின் இன்னிங்ஸ் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆசிய கோப்பையில் ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் சேர்த்த 122 ரன்களே அதிகபட்ச ரன் குவிப்பாக இருந்தது.

# சர்வதேச டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் எவின் லீவிஸ் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2016-ல் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷேன் வாட்சன் அதிகபட்சமாக 124 ரன்கள் சேர்த்திருந்தார்.

# டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதியிலும், அதைத் தொடர்ந்து புளோரிடாவில் நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய அணியை, மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x