உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி: பக்வாயோவை வென்றார் ஜெப் ஹார்ன்

உலக சாம்பியன் குத்துச்சண்டை போட்டி: பக்வாயோவை வென்றார் ஜெப் ஹார்ன்
Updated on
1 min read

வெல்டர்வெயிட் உலக சாம்பி யன் பட்டத்துக்கான குத்துச்சண்டை போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இதில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரபல குத்துச்சண்டை வீரரான மானி பக்வாயோவும், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியரான ஜெப் ஹார்னும் மோதினர்.

குத்துச்சண்டை போட்டிகளில் பல பட்டங்களை வென்ற பக்வாயோ இப்போட்டியில் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஆரம்ப சுற்றுகளில் பக்வாயோ மீது ஹார்ன், சரமாரியாக தாக்குதல் நடத்தினார். 6 மற்றும் 7-வது சுற்றுகளில் ஹார்ன் விட்ட குத்துகளால் பக்வாயோவின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் சுதாரித்துக்கொண்ட பக்வாயோ, அதன் பிறகு தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். குறிப்பாக 9-வது சுற்றில் ஜெப் ஹார்னுக்கு சரமாரியாக குத்துகளை விட்டு பக்வாயோ தடுமாற வைத்தார்.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி, ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியதால் போட்டி பரபரப்பாக இருந்தது. இறுதியில் 117-111, 115- 113, 115-113 என்ற புள்ளிக் கணக்கில் பக்வாயோவை வென்று ஜெப் ஹார்ன், சாம்பியன் பட்டத்தை வென்றார். இருப்பினும் இப்போட்டி யில் பக்வாயோ தோற்றதற்கு நடுவர்களின் தவறான தீர்ப்பே காரணம் என்று அவரது தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in