Published : 19 Jul 2017 09:58 AM
Last Updated : 19 Jul 2017 09:58 AM

டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்க தூத்துக்குடி அணிக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2-வது சீசனில் விளையாட நடப்பு சாம்பியனான தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்கு இடைக்கால தடை விதித்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த அணிக்கு தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் அன்ட் என்டர்டைன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. இதன் உரிமையாளர் தூத்துக்குடி அல்பர்ட் அன் கோ குழுமத்தின் இயக்குநர் அல்பர்ட் முரளிதரன் ஆவார்.

அணியை போட்டியில் பங்கேற்க செய்வதற்காக தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் அன்ட் என்டர்டைன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.5.21 கோடி கடனாக வாங்கியது. இந்த பணத்தை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், 6.7.2017 தேதியில் ரூ.2,06,03,204 பாக்கி இருந்தது. பணத்தை திருப்பி செலுத்த வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை.

இதையடுத்து பேட்ரியாட்ஸ் அணி 2-வது சீசனில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி, வங்கி சார்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என். ராஜசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகையை பாக்கி வைத்துள்ளதால், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வரும் 17.8.2017 வரை தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதிக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x