Published : 14 Jul 2017 07:17 PM
Last Updated : 14 Jul 2017 07:17 PM

கிரெய்க் எர்வின் 151 நாட் அவுட்: ஜிம்பாப்வே அணி 8 விக். இழப்புக்கு 344 ரன்கள்

கொழும்புவில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பாசிட்டிவ்வாக பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியது.

ஜிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டியில் ஒருநாள் ஆட்டத்தில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும் இது.

இந்த நிலைக்குக் காரணம் அந்த அணியின் கிரெய்க் எர்வின், இவர் மெதுவான பிட்சில் இலங்கை ஸ்பின்னர்களை திறம்பட கையாண்டதோடு, மிக அருமையாக சிறு சிறு கூட்டணிகளை அமைத்தார், இல்லையெனில் 70/4 என்ற நிலையிலிருந்து திருப்திகரமான 344 ரன்களை முதல் நாளில் எட்டியிருக்க வாய்ப்பில்லை.

38/2 என்ற நிலையில் இறங்கிய எர்வின் மேலும் 2 விக்கெட்டுகள் விழுந்ததையும் கண்டார். 70/4 என்று ஆனது. பின் கள வீரர்க்ள் இவருக்கு உறுதுணையாக ஆடினர். வியர்வை பிசுபிசுக்கும் கொழும்பு வெயிலில் கிரெய்க் எர்வினின் ஆட்டம் ஒரு அருமையான டெஸ்ட் இன்னிங்ஸுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது.

முதல் ரன் எடுக்க 13 பந்துகள் எடுத்துக் கொண்டார், முதல் 50 பந்துகளில் 19 ரன்களே எடுத்தார். அதன் பிறகு மெதுவாக அவரது தன்னம்பிக்கை மேலோங்க டிரைவ்கள், கட்ஷாட்கள், சில சந்தர்ப்பங்களில் ரிவ்ர்ஸ் ஸ்வீப்கள் என்று அசத்தினார், ஸ்பின்னர்களிடம் குறிப்பாக ஹெராத்திடம் அடிக்கடி பீட் ஆனாலும் வேகப்பந்து வீச்சாளர்களால் கிரெய்க் எர்வினை ஒன்றும் செய்ய முடியவில்லை. மந்தமான பிட்சில் சுரங்க லக்மல், லாஹிரு குமரா ஆகியோர் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. மீண்டும் ஹெராத் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் மசகாட்சா, சகாப்வா, பிறகு சிகந்தர் ரஸா, பிறகு வாலர் என்று ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசேலா குணரத்னே விக்கெட் கீப்பர் மூர் மற்றும் கிரீமர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் எர்வின்-சிகந்தர் கூட்டணி 84 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பிறகு மால்கம் வாலர்-எர்வின் கூட்டணி 7-வது விக்கெட்டுக்காக 65 ரன்களைச் சேர்த்தனர். கடைசியில் இன்னமும் உடைக்க முடியாத திரிபானோ-எர்வின் கூட்டணி 62 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து ஆடி வருகிறது.

எர்வின், ஹெராத்தை ஸ்வீப் செய்து சதம் கண்டார், 150 ரன்களை ஆட்டம் முடியும் போது எடுத்தார், இதில் 13 பவுண்டரிகள், லாங் ஆனில் ஒரு சிக்ஸ் ஆகியவை அடங்கும்.

தினேஷ் சந்திமால் கேப்டன்சியின் முதல்நாளில் இலங்கையின் பீல்டிங் கூர்மையாக இருந்தது. சமீப காலங்களில் இலங்கையின் பீல்டிங்தான் பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது.

ரங்கன்னா ஹெராத் 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் நாள் ஆட்டம் ஜிம்பாப்வேவுக்கு சாதகமாக அமைந்துள்ளது, நாளையும் எர்வின் தொடர்ந்தால் 400 ரன்களை ஜிம்பாப்வே எட்டினால் இலங்கையை மிரட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x