இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது ஜிம்பாப்வே அணி

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது ஜிம்பாப்வே அணி
Updated on
1 min read

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என கைப்பற்றியது.

இரு அணிகளும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 5-வது ஒருநாள் போட்டி ஹம்பன்தோட்டாவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணியை 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள்.

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குணரத்னே 59, குணதிலகா 52, கேப்டன் மேத்யூஸ் 24 ரன்கள் சேர்த்தனர். 42 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தத்தளித்த நிலையில் குணரத்னே, ஷமீரா ஜோடி 50 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர்.

ஜிம்பாப்வே தரப்பில் ஷிகந்தர் ராசா 3, கீரிமர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா, சாலமன் மைர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மசகட்சா 73, மைர் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 14.2 ஓவர்களில் 92 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த வலுவாக இருந்த ஜிம்பாப்வே அதன் பின்னர் சீரான இடைவேளையில் விக்கெட்டை பறிகொடுத்தது.

இர்வின் 2, சீன் வில்லியம்ஸ் 2, முசகண்டா 37, வாலர் 1, மூர் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். 34.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிகந்தர் ராசா, கீரிமர் ஜோடி நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். ராசா 27, கீரிமர் 11 ரன்கள் சேர்க்க ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 3-2 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஷிகந்தர் ராசாவும், தொடர் நாயகனாக மசகட்சாவும் தேர்வானார்கள்.

2001-ம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு இருதரப்பு தொடரில் அதிலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக தற்போது தான் ஜிம்பாப்வே அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in