

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-வது இன்னிங்ஸில் அதிக ரன்களைத் துரத்திப் பிடித்து அந்த அணி புதிய சாதனை படைத்தது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் அந்த அணி 3-2 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 356 ரன்களையும், இலங்கை அணி 346 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து தங்கள் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, 377 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் 388 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த இலங்கை அணி, 4-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்திருந்தது. மெண்டிஸ் 60 ரன்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 17 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
நேற்று காலைஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெண்டிஸ் 66 ரன்களிலும், மேத்யூஸ் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நேரத்தில் திக்வெல்லாவும், குணரத்னேவும் ஜோடி சேர்ந்து, தோல்வியின் பிடியில் இருந்து இலங்கை அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
திக்வெல்லா 37 ரன்களை எடுத்திருந்தபோது சிக்கந்தர் ராசாவின் பந்தில் அவரை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரெகிஸ் சகப்வா தவற விட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட திக்வெல்லா, 69 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். அவருக்கு உறுதுணையாக குணரத்னேவும், ஜிம்பாப்வேயின் பந்துவீச்சுகளைச் சமாளிக்க, இலங்கை அணியின் நம்பிக்கை கூடியது. இலங்கை அணியின் ஸ்கோர் 324 ரன்களாக இருந்தபோது, வில்லியம்சின் பந்தில் சகப்வாவிடம் கேட்ச் கொடுத்து திக்வெல்லா ஆட்டம் இழந்தார். 118 பந்துகளை எதிர்கொண்ட அவர், 80 ரன்களைச் சேர்த்தார். திக்வெல்லா - குணரத்னே ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்களைச் சேர்த்தது.
திக்வெல்லா ஆட்டம் இழந்தபோதும், குணரத்னே பதற்றமில்லாமல் பொறுப்பாக ஆடி இலங்கையின் கையில் இருந்து வெற்றி நழுவாமல் பார்த்துக்கொண்டார். 94 பந்துகளில் அரைசதம் எடுத்த அவர், தில்ரூவன் பெரேராவுடன் சேர்ந்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இலங்கையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. குணரத்னே 81 ரன்களுடனும், தில்ரூவன் பெரைரா 29 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் 2-வது இன்னிங்ஸில் அதிக ரன்களைத் துரத்திப் பிடித்து இலங்கை அணி புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்னர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 2006-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் 352 ரன்களைத் துரத்திப் பிடித்ததே அந்த அணியின் சாதனையாக இருந்தது.
மேலும் இலங்கை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள தினேஷ் சந்திமாலுக்கு இந்த வெற்றி கூடுதல் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக இம்மாதம் இறுதியில் தொடங்கவுள்ள தொடரை எதிர்கொள்ள தேவையான புத்துணர்ச்சியை இந்த வெற்றி இலங்கை அணிக்கு அளித்துள்ளது.