

ஜாகீர் கான், ராகுல் திராவிட் ஆகியோரது நிலை என்ன என்பதற்கு தெளிவான பதில் அளிக்காத பிசிசிஐ, ரவி சாஸ்திரி விருப்பத்திற்கேற்ப பாரத் அருணை பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரவிசாஸ்திரியும் பாரத் அருணும் இணைந்து உலகக்கோப்பை வரை பயிற்சியாளர்களாக நீடிப்பர்.
ரவிசாஸ்திரி முன்னதாக அணியின் இயக்குநராக இருந்தபோது பாரத் அருண் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் இவரையே மீண்டும் பவுலிங் பயிற்சியாளராக்க வேண்டும் என்பது சாஸ்திரியின் விருப்பம்.
முன்னதாக சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசகர்கள் குழு ஜாகீர் கான் மற்றும் ராகுல் திராவிட் ஆகியோரை ஆலோசகர்களாக நியமித்திருந்தது. ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை, கிரிக்கெட் ஆலோசனைக் குழு வரம்பு மீறி செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன, அதாவது ரவிசாஸ்திரி மீது திராவிட், ஜாகீர் கான் ஆகியோரை திணிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவிடம் கிரிக்கெட் ஆலோசகர்கள் குழு விளக்கம் அளித்தனர்.
அதன் பிறகு திராவிட், ஜாகீர் கான் நியமனத்தை பிசிசிஐ நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் சாஸ்திரி , உச்ச நீதிமன்றம் நியமித்த சிஓஏ அதிகாரிகள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து பாரத் அருண் தான் தனக்குத் தேவை என்று வலியுறுத்தினார்.
“என்னுடைய முக்கியக் குழுவில் யார் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன், இதைத்தான் இப்போது நீங்கள் அறிவிப்பாகக் கேட்டீர்கள்” என்று ரவிசாஸ்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாரத் அருண் தவிர, சஞ்சய் பாங்கர் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஸ்ரீதர் பீல்டிங் பயிற்சியாளராகவும் 2019 உலகக்கோப்பை வரை நீடிப்பார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜாகீர் கான், திராவிட் பற்றி ரவி சாஸ்திரி கூறும்போது, “அவர்களது கால/நேர சவுகரியங்களைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. அணிக்காக அவர்கள் எவ்வளவு ஆலோசனைகளை வழங்க முடியும் என்பது மதிப்பு மிக்கது, அவர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள். நான் அவர்களிடமும் இது குறித்து பேசிவிட்டேன், எனவே இதில் எந்தவித சிக்கல்களும் இல்லை.
கிரிக்கெட் ஆலோசகர்கள் குழுவுக்கு நன்றி. இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். என்னை இதற்கு பொருத்தமானவர் என்று முடிவெடுத்த அக்குழுவுக்கு என் நன்றிகள்” என்றார் ரவிசாஸ்திரி.