

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலாந்தின் டெர்பி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீராங்கனைகளான பூனம் ராவத் 16, ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மாவுடன் இணைந்த கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாக பேட் செய்தார்.
தீப்தி சர்மா 110 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் சேர்த்த நிலையில் காஞ்சனா பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. மிதாலி ராஜ் 78 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் ரனவீரா பந்தில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஜூலன் கோஸ்வாமி 9, ஹர்மான்பிரித் கவுர் 20, வேதா கிருஷ்ணமூர்த்தி 29, சுஷ்மா வர்மா 11 என ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வீரக்கொடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து 233 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியின் ஹன்சிகா 29, ஹசினி பெரேரா 10, ஜெயங்கனி 25, ஸ்ரீவர்தனே 37 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டுகளை பறிகொடுக்க திலானி மனோதார மட்டும் சிறப்பாக ஆடி 61 ரன்கள் எடுத்தார். எனினும் தீப்தி ஷர்மா பந்தில் விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவிடம் ஸ்டம்பிங் முறையில் திலானி ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்தவர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் ஜுலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தீப்தி ஷர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.