பந்தை அருமையாகவே அடிக்கிறார் தோனி; ஒரு இன்னிங்சிற்காக நாம் பொறுமை இழக்க வேண்டாம்: விராட் கோலி

பந்தை அருமையாகவே அடிக்கிறார் தோனி; ஒரு இன்னிங்சிற்காக நாம் பொறுமை இழக்க வேண்டாம்: விராட் கோலி
Updated on
1 min read

மே.இ.தீவுகளுக்கு எதிராக 16 ஆண்டுகளின் ஆக மந்தமான அரைசதத்தை எடுத்த தோனியின் இன்னிங்ஸ் குறித்து விராட் கோலி தன் மவுனத்தைக் கலைத்துள்ளார்.

189 ரன்கள் என்ற போதுமானதற்கும் குறைவான இலக்கை விரட்டிய போது மற்ற வீரர்கள் சொதப்ப, தோனி ஒருமுனையில் நின்றார், ஆனால் 114 பந்துகளில் 54 ரன்களை ஒரேயொரு பவுண்டரியுடன் அடித்து கடைசியில் தூக்கி கையில் கொடுத்து விட்டுச் சென்றார், இதனால் இந்திய அணி 178 ரன்களுக்குச் சுருண்டு படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்த இன்னிங்ஸ் குறித்து கோலியிடம் தோனியின் ஃபார்ம், பினிஷிங் திறமை மங்கி வருவது என்ற ரீதியில் கேள்விகள் எழ, கோலி, “ஒரு ஆட்டத்தை வைத்து நாம் மிகவும் பொறுமை இழக்கிறோம் என்று நினைக்கிறேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழும், எந்த பேட்ஸ்மெனும் திணறலாம், எந்த ஒரு வீரரும் கிரீசில் அப்படி தேங்கி விட வாய்ப்புள்ளது. டாப் ஃபார்மில் இருந்தால் கூட இப்படியாவது இயல்புதான்.

அவர் பந்தை அருமையாக அடித்து வருகிறார், எந்த ஒரு சூழல் குறித்தும் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எந்த மாதிரியான பிட்சில் ஆடுகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். நான் கூட வலையில் ஸ்பின்னர்களை அடித்து ஆட முயன்றேன் முடியவில்லை. ஏனெனில் பயிற்சி பிட்ச் அப்படிப்பட்டது, ஆனால் ஆட்டக் களம் கொஞ்சம் பரவாயில்லை.

பவுன்ஸ் அடித்து ஆட ஏதுவாக இல்லையெனில் ஒன்று இரண்டு என்று ஆட வேண்டியதுதான், அந்த ஒரு போட்டியில்தான் தோனியினால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை. இதற்கு முன் நல்ல இன்னிங்சையே ஆடினார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கைக்கு எதிராக அருமையாக ஆடினார். எனவே ஒரு பிரச்சினையும் இல்லை. பந்துகளை நன்றாகவே அடித்து வருகிறார் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் இல்லாவிட்டாலும் 100க்கு அருகில் உள்ளது.

இவ்வாறு கூறினார் கோலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in