

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை நிகழ்த்திய இந்திய கேப்டன் மிதாலி ராஜ், இந்தச் சாதனையை ஏமாற்றம் காரணமாக கொண்டாடவில்லை.
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றது அவரை கடுமையாக பாதித்துள்ளது.
இதோ மிதாலி ராஜ், “இந்த முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றதால் கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். வென்றிருந்தால் கொண்டாட்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால் ஆட்டத்தின் முடிவில் எல்லாமே அன்றாட, இயல்புநிலையிலேயே இருந்தது, இந்தச் சாதனையை நிகழ்த்திய உணர்வே எனக்கு ஏற்படவில்லை” என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் அவர் தெரிவித்தார்.
“என்னப் பொறுத்தவரையில் இந்த சாதனையில் புதிதாக எதுவும் இல்லை. உலகக்கோப்பையில் இந்தச் சாதனை நிகழ்ந்திருப்பதால் அதற்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. ஆனால் அணி வெற்றி பெறாத நிலையில் தனிநபர் சாதனைகள், ஆட்டம் ஒரு பொருட்டல்ல என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
மிதாலி இப்போது 183 ஒருநாள் போட்டிகளில் 6028 ரன்களை 51.52 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
மிதாலி மேலும் கூறும்போது, “இந்த மைல்கல் சில ஆண்டுகளாகவே உயர்மட்டத்தில் நான் சீராக ரன்களை எடுத்து வந்ததன் விளைவே. ஆனால் இதுவே இறுதி இலக்கல்ல. ஒவ்வொரு போட்டியிலும் மேலும் வளர்ச்சியடையவே விரும்புகிறேன்.
இந்த உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் புதிய தரநிலைகளை கொண்டு வந்துள்ளது, முந்தைய தொடர்களை விட ஆட்டம் வளர்ந்து வந்துள்ளது இங்கு வெளிப்ப்படையாகத் தெரிகிறது. பலவீனமான அணிகள் இல்லை, ஒவ்வொரு அணியிலும் சதமடிப்போர் உள்ளனர். பல அணிகளும் 270+ ஸ்கோர்களை எட்டுகின்றன.
இந்த உலகக்கோப்பையில் நான் களத்தில் இறங்கி கூடுதல் சுதந்திரத்துடன் ஆட எண்ணியிருந்தேன். ஆனாலும் அணியின் தேவைகள் என்னவென்பதையும் நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பொறுப்புடன் ஆட வேண்டும். ஏனெனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நான் ஆட்டமிழந்தவுடன் அணி சரிவு கண்டது.
மற்றவர்கள் அதிக ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையை நான் பார்க்க விரும்பவில்லை. அதனால்தான் நான் என்னுடைய ஷார்ட் தேர்வில் எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.
2 ஆண்டுகளில் வேண்டுமானால் நான் எனக்கான சுதந்திரத்துடன் ஆட முடியும் என்று நினைக்கிறேன். அணி என்னை நம்பியிருக்கிறது என்பதில் எனக்கு பெருமை இருக்கிறது, ஆனால் திரும்பிப் பார்க்கையில் அது அனுகூலமாகவும் இல்லை.
அணியின் முக்கிய மட்டையாளராக இருக்கும் சுமையினால் என்னுடைய ஆட்டத்தை மேலும் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. பேட்டிங்கின் மற்ற சில சாத்தியங்களை என்னால் ஒத்திகை பார்க்க முடியவில்லை. இப்போதும் கூட நான் அணியின் தேவைக்கேற்பவே ஆடி வருகிறேன். இதனால் என்னுடைய இயல்பூக்கங்களை கட்டுப்படுத்தி கொண்டு ஆடி வருகிறேன்” என்றார் மிதாலி ராஜ்.