Published : 15 Jul 2017 07:15 PM
Last Updated : 15 Jul 2017 07:15 PM

மிதாலி ராஜ் சதம்; ராஜேஸ்வரி அபார பந்து வீச்சு: நியூஸி.யை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா

டெர்பியில் மிதாலி ராஜ் சதம், வேதா கிருஷ்ணமூர்த்தியின் இறுதிக்கட்ட அதிரடி மூலம் 265 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு நியூஸிலாந்தை 79 ரன்களுக்குச் சுருட்டி உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணி 186 ரன்களில் மிகப்பெரிய வெற்றியுடன் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

2010-க்குப் பிறகு ஐசிசி தொடர் ஒன்றில் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது .இதே டெர்பி மைதானத்தில் இந்திய மகளிர் அணி 4 போட்டிகளில் தோற்கவில்லை, அரையிறுதியும் இதே மைதானத்தில்தான் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெயக்வாட் 7.3 ஓவர்களில் 1 மெய்டன் 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற நியூஸிலாந்து 25.3 ஓவர்களில் 79 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. ராஜேஸ்வரி கெயக்வாட் 6 போட்டிகளில் பெஞ்சில் இருந்தார், இன்று வாய்ப்பு கிடைத்தவுடன் முக்கிய ஆட்டத்தில், அதுவும் வாழ்வா சாவா நெருக்கடி போட்டியில் சரியாக எழுச்சி பெற்றார்.

நியூஸிலாந்து இன்னிங்சை தொடங்கியது முதலே இந்திய அணியினர் வெற்றி பெற்றே தீருவது என்ற தீராத தீவிரத்துடன் ஆடினர். அணி பலத்தின் படி நியூசிலாந்துதான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது ஆனால் நியூஸிலாந்து அணி அதிர்ச்சிகரமாக மடிந்தது.

நியூஸிலாந்து அணியில் சாட்டர்த்வெய்ட் 26 ரன்களை எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்தபடியாக கேஜே மார்டின் 12 ரன்களையும் கடைசியில் கெர் 12 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர், மற்றபடி கேப்டன் பேட்ஸ் உட்பட வீராங்கனைகளின் ஸ்கோர் 1, 5, 7, 1, 5, 4, 5, 0. ஆகும்.

இந்தியத் தரப்பில் ஜுலன் கோஸ்வாமி வழக்கம் போல் அருமையாக வீசி 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இவர்தான் விக்கெட் கீப்பர்/தொடக்க வீராங்கனை பிரீஸ்டை காட் அண்ட் பவுல்டு செய்தார். ஆட்டத்தின் எந்த நிலையிலும் நியூஸிலாந்து அணி எழும்பவேயில்லை, மிதாலி ராஜ் கேப்டன்சியும் களவியூகமும், பந்து வீச்சு மாற்றமும் அபாரமாக அமைந்தது. டிபி ஷர்மா 2 விக்கெட்டுகளையும் பாண்டே, பூனம் யாதவ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மிதாலி ராஜ் சதமெடுத்தாலும் 6 போட்டிகள் உட்கார வைக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெயக்வாட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்தை காலி செய்ததார். இருந்தாலும் தடுமாறிய இந்திய அணியை தன் சதத்தினால் தூக்கி நிறுத்திய மிதாலி ராஜ் ஆட்ட நாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மிதாலி ராஜ் சதம், வேதா கிருஷ்ண மூர்த்தி அதிரடி அரைசதம் : இந்தியா 265 ரன்கள்!

டெர்பியில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் வாழ்வா சாவா போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, கேப்டன் மிதாலி ராஜின் அபார சதத்துடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது.

வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குச் செல்லும் என்ற நிலையில் நியூஸிலாந்து கேப்டன் பேட்ஸ் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.

அதற்குப் பலன் உடனடியாகக் கிட்டியது, ராவத் 4 ரன்களிலும் அதிரடி வீராங்கனை மந்தனா 13 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றமளிக்க இந்திய அணி 21/2 என்று சரிவு அபாயம் கண்டது.

ஆனால் அதன் பிறகு கேப்டன் மிதாலி ராஜ், கவுர் ஆகியோர் இணைந்து நிலை நிறுத்தியதோடு அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தனர். இதனையடுத்து இருவரும் சுமார் 28 ஓவர்கள் நிலைத்து ஆடி 3-வது விக்கெட்டுக்காக 132 ரன்களைச் சேர்த்தனர், அப்போது 90 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த கவுர் வெளியேறினார்.

உடனேயே டிபி சர்மாவும் டக் அவுட் ஆக இந்திய அணி மீண்டும் 37-வது ஓவரில் 154/4 என்று ஆனது. மிதாலி ராஜ் அரைசதம் எடுத்த போது அது அவரது 50-வது அரைசதமானது, ஆனால் அவர் சதம் எடுத்ததால் இது 6-வது ஒருநாள் சதமாக அமைந்தது.

154/4 என்ற நிலையில் கேப்டன் மிதாலியுடன் வேதா கிருஷ்ணமூர்த்தி களமிறங்கினார். இருவரும் இணைந்து சுமார் 14 ஓவர்களில் 108 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதில் வேதா கிருஷ்ண மூர்த்தி ஆக்ரோஷமாக ஆடி 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

மிதாலி ராஜ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து 50-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவரது மெதுவான இன்னிங்ஸ்கள் விமர்சனத்துக்குள்ளானதை அடுத்து இம்முறை பாசிட்டிவாக ஆடினார் மிதாலி.

இந்நிலையில் நியூஸிலாந்தை இந்திய அணி வீழ்த்தி உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x