

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தியா உள்ளிட்ட 43 நாடுகளில் இருந்து மொத்தம் 562 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் லண்டனில் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் நடைபெறுவதால் அதற்கு தயாராகும் விதமாக சீனா, ஜப்பான், கத்தார், பக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங் கனைகள் இம்முறை ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை புறக்கணித்திருந்தனர்.
எனினும் 94 வீரர், வீராங்கனை களுடன் இந்த தொடரை அணுகிய இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கத்துடன் மொத்தம் 29 பதக்கங்கங்கள் வேட்டையாடி பட்டியலில் முதன் முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஆசிய தடகள சாம்பியன் ஷிப்பில் இந்தியா அதிகபட்சமாக கடந்த 1985-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் 10 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் 22 பதக்கம் கைப்பற்றியிருந்தது. இந்த தொடர் நடத்தப்பட்டு வரும் 1983-ம் ஆண்டு முதல் சீனாவே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
முதல் நாளில் இருந்து ஆதிக்கம் செலுத்தும் சீனா அதை கடைசி நாள் வரை அப்படியே தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் இம்முறை சீனா 8 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 20 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 2-வது இடம் பிடித்தது. பதக்க பட்டியலில் 3 முதல் 10 இடங்களை முறையே பிடித்த கஜகஸ்தான் (8), ஈரான் (5), வியட்நாம் (4), கொரியா (4), குவைத் (3), கிர்கிஸ்தான் (3), இலங்கை (5), தாய்லாந்து (5) ஆகிய நாடுகள் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.
மகளிர், ஆடவருக்கான 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இதேபோல் 3 ஆயிரம் ஸ்டீபிள் சேஸ், ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்று பிரம்மிக்க வைத்தது.
ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பக்ரைன் நட்சத்திர வீரர் ஹாரோன் கலந்து கொள்ளாத நிலையில் இந்தியாவின் முகமது அனாஸ் தங்கப் பதக்கம் வென்றார். எனினும் கேரளாவை சேர்ந்த இவரின் திறனை குறைத்து மதிப்பிட முடியாது.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் சுதா சிங் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப் பற்றினார். இந்த பிரிவில் பக்ரைன் நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பிய னான ரூத் ஜெபேட் கலந்து கொள்ளவில்லை. உலக சாதனை படைத்துள்ள அவர் கலந்து கொள்ளாத நிலையில் கிடைத்த வாய்ப்பை சுதா சிங் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
இதேபோல் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள குண்டு எறிதல் வீரரான கோங் லிஜியோ (19.56 மீட்டர் தூரம் வீசும் திறன் கொண்டவர்) இந்த தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இந்தியாவின் மன்பிரித் கவுர் 18.28 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இது அவரது சொந்த சாதனையான 18.86 மீட்டரை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வலுவான கத்தார், ஜப்பான், சவுதி அரேபியா அணிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த பிரிவில் இந்தியா எளிதாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆனால் ஆடவருக் கான ஈட்டி எறிதல், மகளிருக்கான ஹெப்டத்லான், மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் இந்தியா முத்திரை பதித்தது.
மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் நிர்மலா ஷியோரன் தலைமையில் களமிறங்கிய இந்தியா முதலிடம் பிடித்தது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நீண்டகாலமாக இந்த பிரிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சீன தைபேவின் ஷெங் சாவோ சனை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் ஷெங் சாவோவிடம் அடைந்த தோல்விக்கு நீரஜ் சோப்ரா பதிலடி கொடுத்தார்.
மகளிருக்கான ஹெப்டத்லா னில் இந்தியாவின் சுவப்னா பர்மான் சிறந்த திறனை வெளிப்படுத்தி ஜப்பானின் மெக் ஹெம்பிலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து அசத்தினார். தனிநபர் பிரிவில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் சொக்கூரணியை சேர்ந்த லட்சுமண் கோவிந்தன் 2 தங்கப் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்.
லட்சுமண் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்கள் வென்றார். அதேவேளையில் நிர்மலா ஷியோரன், முகமது அனாஸ் ஆகியோரும் தலா இரு தங்கப் பதக்கங்கள் வென்றனர் (தனிநபர் பிரிவு, 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்). நட்சத்திர வீராங்கனையான டூட்டி சந்த் 2 வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜெய் குமார் சரோஜூம், மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பி.யூ.சித்ராவும் தங்கப் பதக்கம் வென்று ஆச்சர்யம் அளித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சித்தாந்த் திங்களயா (ஆடவர் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), அங்கித் சர்மா (ஆடவர் நீளம் தாண்டுதல்), பூவம்மா (மகளிர் 400 மீட்டர் ஓட்டம்), டின்டு லூக்கா (மகளிர் 800 மீட்டர் ஓட்டம்), சீமான பூனிமா (மகளிர் வட்டு எறிதல்), அனு ராணி (மகளிர் ஈட்டி எறிதல்) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
ஆடவர் வட்டு எறிதலில் கடந்த முறை தங்கம் வென்ற விகாஷ் கவுடா இம்முறை 3-வது இடத்தையே பிடித்தார். கடைசி நாளான நேற்று சர்ச்சைக்குரிய நிகழ்வும் அரேங்கேரியது.
மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆனால் இலக்கை அடைவதற்கு சில மீட்டருக்கு முன்னாள் அவர், இலங்கையை சேர்ந்த நிமாலி என்பவரை வழிமறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து வீடியோவை ஆய்வு செய்த நடுவர்கள் அர்ச்சனா ஆதவை தகுதி நீக்கம் செய்தனர். இதனால் நிமாலி தங்கப் பதக்கம் வென்றார்.
மற்ற சிறப்பம்சங்களாக சங்கிலி குண்டு எறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான கஜகஸ்தானை சேர்ந்த தில்ஷோத் நஸரோவ் 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் 2009, 2013 மற்றும் 2015-ம் ஆண்டு களிலும் தங்கம் வென்றிருந்தார். இதபோல் வட்டு எறிதலில் ஈரானை சேர்ந்த எஹ்சன் ஹதாடி 5-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். இவர் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாட்கள் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித் துள்ளனர். இதற்கு முன்னர் இந்த போட்டிகளை இந்த அளவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கண்டுகளித்தது இல்லை. அந்த வகையில் அதிகம் ரசிகர்களால் பார்வையிட்டப்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பாக இந்த தொடர் அமைந்துள்ளது.