Published : 26 Jul 2017 04:36 PM
Last Updated : 26 Jul 2017 04:36 PM

உமேஷ் யாதவ் பணிச்சுமையை நன்றாக நிர்வகிக்கிறார்: கிளென் மெக்ரா புகழாரம்

சர்வதேச கிரிக்கெட்டில் தீராத பணிச்சுமையை உமேஷ் யாதவ் நன்றாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டு விட்டார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சு மாஸ்டர் கிளென் மெக்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

எம்.ஆர்.எஃப். வேகப்பந்து வீச்சு அகாதெமியில் 2 நாட்கள் பயிற்சியின் இடையில் அவர்,

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, “தற்போது உமேஷ் யாதவ் சிறப்பாக வீசி வருகிறார். ஆட்டத்துக்கு ஆட்டம் அவர் முன்னேறி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வயது கூடியவர். எனவே தற்போது இவர் அனுபவமிக்கவராகி விட்டார், அதனால் காயமடைந்தாலும் அதிலிருந்து மீளுவது எப்படி என்பதையும் அறிந்து கொண்டுள்ளார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் பணிச்சுமையை நன்றாகப் புரிந்து கொண்டு அதனை நிர்வகிக்க உமேஷ் கற்றுக் கொண்டுள்ளார்.

உடல் தகுதி என்பது எவ்வளவு நேரம் வீசுகிறோம் என்பதைப் பற்றியதல்ல. எவ்வளவு விரைவாக நாம் காயத்திலிருந்து குணமடைகிறோம் என்பதுதான் உடல்தகுதி. இங்குதான் உமேஷ் யாதவ் தற்போது தன்னம்பிக்கையுடன் வீசுகிறார் என்று கூறுகிறேன்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை, ஆண்டு முழுதும் வீசிக் கொண்டேயிருந்தால் ஒருகட்டத்தில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே வலுவும் உடல்தகுதியும் மீண்டும் பெற இடைவெளி தேவை.

இந்திய பவுலர்கள் நன்றாக வீசி வருகின்றனர், உடல்தகுதியிலும் நன்றாக பரமாரிக்கக் கற்றுக்கொண்டுள்ளனர். உமேஷ் இதில் தற்போது சிறந்து விளங்குகிறார்.

இளம் வயதில் நம் உடல் இன்னமும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது காயங்கள் எளிதில் ஏற்படும், ஆனால் உடல் வளர்ச்சியடைவது நின்று விட்டால் காயங்கள் குறையும்.

அனைவரும் வேகமாக வீசவே விரும்புவர், நானும் கூட அப்படித்தான், ஆனால் எக்ஸ்பிரஸ் ஸ்பீட் என்பது கடினம். எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீசுவது ஒரு தனிப்பட்ட திறமை, அது பயிற்சியின் மூலம் வராதது, இது ஒரு அரிதான திறமையே. நான் அம்மாதிரியான வீச்சாளர்களை தேடி வருகிறேன். ஆனாலும் மணிக்கு 150கிமீ வேகத்துக்கு மேல் வீசுவது அரிதே.

1970களில் உலகை அச்சுறுத்திய மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சிலிருந்து வேகப்பந்து வீச்சு அடிப்படையில் மாறவில்லை என்றே கருதுகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x