விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றுக்கு ஜோகோவிச், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 2-வது சுற்றுக்கு ஜோகோவிச், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேற்றம்
Updated on
1 min read

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 2-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 47-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிசானை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-3, 2-0 என முன்னிலை வகித்த போது கிளிசான் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஜோகோவிச் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

6-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6, 6-2, 7-6 என்ற நேர் செட்டில் 53-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜன் லேனார்டையும், அர்ஜென்டினா வின் டெல்போர்ட்டோ 6-3, 3-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் 486-ம் நிலை வீரரான தனாஸி கொக்கினாகிஸையும், 39-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-3, 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 27-ம் நிலை வீரரான பிரான்சின் ரிச்சர்டு காஸ்கட்டையும் வீழ்த்தினர்.

15-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் 6-3, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் 216-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டேனியல் பிரான்ட்ஸையும், 27-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் 59-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக்கையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 247-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் இரினா பால்கோனியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெர்பர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் 75-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்சாண்ட்ரோவாவையும், 24-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான்டேவேஹே 7-5, 6-2 என்ற நேர் செட்டில் 48-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் மோனா பார்த்தலையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in