தடகள வீராங்கனை டூட்டி சந்த் மீதான பாலின சோதனை வழக்கை மீண்டும் நடத்த முடிவு

தடகள வீராங்கனை டூட்டி சந்த் மீதான பாலின சோதனை வழக்கை மீண்டும் நடத்த முடிவு
Updated on
1 min read

22-வது ஆசிய தடகள போட்டி புவனேஷ்வரில் இன்று தொடங்க உள்ள நிலையில், ஓட்டப் பந்தய வீராங்கனையான டூட்டி சந்த் மீதான பாலின சோதனை வழக்கை மீண்டும் நடத்த சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

22-வது ஆசிய தடகள போட்டி புவனேஷ்வரில் இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 42 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடர், லண்டனில் நடைபெற உள்ள ஐஏஏஎப் உலக தடகள போட்டிக்கு தகுதி சுற்றாக அமைந்துள்ளதால் வீரர், வீராங்கனைகள் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என கருதப்படுகிறது. போட்டியை நடத்தும் இந்தியா 95 பேரை கொண்ட அணியுடன் வலுவாக களமிறங்குகிறது.

இதில் மகளிர் பிரிவில் இந்தியாவின் டூட்டி சந்த் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 4x100 மீட்டர் ரிலேவிலும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் டூட்டி சந்த் மீதான பாலின சோதனை வழக்கை மீண்டும் நடத்த சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில்தான் டூட்டி சந்த் பாலின சோதனை சர்ச்சையில் சிக்கினார். அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்ட்ரோஜன் ஹார்மோன் (androgen hormone) சுரப்பது கண்டறியப்பட்டது.

ஹைபர்ஆண்ட்ரோஜெனிசம் (hyperandrogenism) என்ற ஹார்மோன் பிரச்சினையால் பாலின சோதனையில் டூட்டி சந்த் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுதத்து சர்வதேச தடகள கூட்டமைப்பு அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது.

இந்த தடைக்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் டூட்டி சந்த் முறையிட்டார். அவருக்கு ஆதரவாக இந்திய விளையாட்டு ஆணையமும் களத்தில் குதித்தது. மேலும் சர்வதேச அளவில் பல வீரர்களும், விஞ்ஞானிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆண்டு 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி டூட்டி சந்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நீக்கியது. போதிய ஆதாரம் சமர்பிக்கப்படாததால் அவரது தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் டூட்டி சந்த் பங்கேற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் கூட 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 7-வது இடம் பிடித்தார். இந்நிலையில் பாலின சோதனை வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரித்துள்ள சர்வதேச தடகள கூட்டமைப்பு வழக்கை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் டூட்டி சந்த் மீண்டும் சோதனையை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in