

குண்டு எறிதல் வீராங்கனையான இந்தியாவின் மன்பிரித் கவுர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.
பாட்டியாலாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி பெடேரேஷன் கோப்பை தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மன்பிரித் கவுரிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு ஊக்க மருந்து சோதனை நடத்தியது. இதில் மன்பிரித் கவுர் தடை செய்யப்பட்ட டைமெத்தில்பியூட்டலமைன் என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை மன்பிரித் கவுருக்கு இந்திய தடகள சம்மேளனம் தடை ஏதும் விதிக்கவில்லை. இவரது ‘பி’ மாதிரி சோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது மீண்டும் உறுதி செய்யப்பட்டால் ஆசிய தடகளத்தில் மன்பிரித் கவுர் வென்ற தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும். மேலும் அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியாது.
21 வயதான மன்பிரித் கவுர், இந்த மாத தொடக்கத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பையில் தங்கம் வென்றிருந்தார்.
தொடர்ந்து புவனேஷ்வரில் நடைபெற்ற 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 18.28 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் கைப்பற்றினார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தொடரிலும் தங்கம் வென்றிருந்தார் - ஏஎன்ஐ