Last Updated : 01 Jul, 2017 01:15 PM

 

Published : 01 Jul 2017 01:15 PM
Last Updated : 01 Jul 2017 01:15 PM

ஆட்டமிழக்காமல் தோனி 70 இன்னிங்ஸ்கள்: 3-வது போட்டி புள்ளி விவரங்கள்

3-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியது இந்திய அணி. இதில் தோனி நாட் அவுட்டாக தனது 70-வது இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளார்.

3-வது போட்டி குறித்த புள்ளி விவரங்கள் சில:

மகேந்திர சிங் தோனியின் நேற்றைய 78 நாட் அவுட், மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அவரது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். கிங்ஸ்டனில் 2009-ம் ஆண்டு இதைவிட அதிக ஸ்கோரை தோனி எடுத்துள்ளார்.

இந்த மைதானத்தில் தோனியின் 78 ரன்கள் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும், இதற்கு முன்பு 2011-ல் ரோஹித் சர்மா இதே மைதானத்தில் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்ததே அதிகபட்ச இந்திய ஸ்கோராகும்.

கேப்டனாக இல்லாத போது ஆட்ட நாயகன் விருது பெற்ற வகையில் தோனி நேற்று 6-வது ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். கடைசியாக ஆசியா லெவன் அணிக்காக 2007-ல் கேப்டனாக இல்லாத போது ஆப்பிரிக்கா லெவன் அணிக்கு எதிராக சென்னையில் 139 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகவும் 3 ஸ்டம்பிங்குகளையும் செய்து ஆட்ட நாயகன் விருது பெற்றார் தோனி.

தோனி 70 முறை ஒருநாள் போட்டிகளில் நாட் அவுட்டாக இருந்துள்ளார், அதிகபட்சமாக 72 நாட் அவுட்டுகளுடன் ஷான் போலாக், சமிந்தா வாஸ் உள்ளனர்.

விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ஜேசன் ஹோல்டர் 50 அல்லது அதற்கு அதிகமாக விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய 3-வது கேப்டனாகத் திகழ்கிறார். விவியன் ரிச்சர்ட்ஸ் (64), டிவைன் பிராவோ (53) ஆகியோர் முன்னால் உள்ளனர்.

கேதார் ஜாதவ் ஒருநாள் போட்டிகளில் 61.66 என்ற சராசரி வைத்துள்ளார். அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் 6 முறை நாட் அவுட்டாக திகழ்ந்துள்ளார். மொத்தம் 555 ரன்களில் 2 சதங்கள் ஒரு அரைசதம் அடங்கும்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வகையில் 150 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய 13-வது இந்திய பவுலர் ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x