தமிழ் தலைவாஸ் கபடி அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம்

தமிழ் தலைவாஸ் கபடி அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம்
Updated on
1 min read

புரோ கபடி லீக் தொடரில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளன. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது. இந்த அணியின் பயிற்சியாளராக பாஸ்கரனும், கேப்டனாக அஜய் தாகூரும் உள்ளனர். இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த தொடரின் தொடக்க ஆட்டம் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன். முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். என் அருமை தலைவாஸ், உங்கள் மனதில் பெருமை பொங்க, கோட்டை தாண்டி புகழை சூடிடுங்கள்” என்றார்.

இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா இன்று பிற்பகலில் சென்னையில் நடைபெறுகிறது. கமல்ஹாசன் ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in