

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால தடை முடிவடைந்தது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை #CSKReturns ஹேஷ்டேக்குகள் மூலம் பகிர்ந்து வருகின்றன.
8 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்த வீரர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், மறக்க முடியாத அனுபவங்கள், ரசிகர்களின் செல்ஃபி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸின் பழைய வீரர்களே இடப்பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் 'வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்'னு சொல்லு'' என்ற வாக்கியத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு வருகிறது.
முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது.
மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைக் காரணமாக 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவில்லை. ஆனால் அணியிலிருந்த வீரர்கள் புனே மற்றும் குஜராத் அணிகள் சார்ப்பில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தடை முடிந்துள்ளது.