

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய 3 அணிகள் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் 4-வது அணியாக தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இன்று டெர்பி நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ள இந்திய அணி 8 புள்ளிகளை பெற்றுள்ளது. அதே வேளையில் 6 ஆட்டத்தில், 3 வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லாத நிலையில் நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளுடன் உள்ளது. இதனால் இரு அணிகளுக்குமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு சமவாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் கால் பதிக்கும்.
ஆட்டம் டையில் முடிவடைந்தாலோ, அல்லது மழை காரணமாக கைவிடப்பட்டாலோ இந்திய அணி எளிதாக அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஏனேனில் இந்தியா, நியூஸிலாந்து அணியை விட ஒரு புள்ளி கூடுதலாக உள்ளது. இரு அணிகளுமே கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீள முயற்சிக்கும். இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் தோல்வியடைந்திருந்தன.