

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் முடிந்தும், அதற்கான நியமனம் மற்றும் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க 3 நபர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.
ரவி சாஸ்திரி தேர்வாவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன என பார்க்கப்பட்ட நிலையில், விரேந்திர சேவாக் நேரடியாக வந்து நேர்காணலில் கலந்து கொண்டார். 2 மணி நேரத்துக்கும் மேலாக அவருடனான நேர்காணல் நடந்தது. எனவே ரவி சாஸ்திரிக்கும் மற்றவர்களைப் போல சரிசம வாய்ப்பே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், லால்சந்த் ராஜ்புட், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் நேர்காணலில் நேரடியாக பங்கேற்றதாகவும், ஃபில் சைமன்ஸ் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இருக்கின்றனர். லண்டனில் இருக்கும் டெண்டுல்கர், ஸ்கைப் மூலமாக இந்த நேர்காணலில் பங்கேற்றார்.
"எங்களுக்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதால் அறிவிப்பை இப்போதைக்கு நிறுத்தி வைக்கிறோம். எந்த அவசரமும் இல்லை என நினைக்கிறோம். இலங்கை சுற்றுப் பயணத்துக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது" என கங்குலி ஊடகங்களிடம் பேசுகையில் கூறினார்.
அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்திய கிரிக்கெட்டை வழி நடத்தும் வண்ணம் பயிற்சியாளர் தேர்வு இருக்க வெண்டும் என்பதை கங்குலி உறுதிப்படுத்தினார். மேலும் அவர் பேசுகையில், "நாங்கள் ஒருவரை அறிவிக்கிறோம் என்றால் அவர் அடுத்த உலகக்கோப்பை (2019) வரை இருக்க வேண்டும். நாங்கள் பேசிய வரை, சென்ற வருடத்தில் பார்த்த திட்ட வரைவிலிருந்து புதிய பயிற்சியாளர்கள் கொடுத்த திட்ட வரைவுக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. நியமனம் குறித்து கூடிய விரைவில் முடிவெடுப்போம். அனைவரும் ஒரே அலைவரிசையில் முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.
நானோ, சச்சினோ, ராகுலோ விளையாடப் போவதில்லை. இருக்கும் வீரர்களும் அணியைச் சேர்ந்த மற்றவர்களும்தான் பயிற்சியாளருடன் இருக்கப் போகிறார்கள். அனைவரும் ஒத்திசைவுடன் இருக்க வேண்டும்.
விராட் கோலிதான் இந்த அமைப்பில் முக்கியமானவர். அணிக்கும், அணி வீரர்களுக்கும் எது சிறந்தது என்பதை வைத்தே முடிவெடுப்போம். ஏனென்றால் விளையாடப்போவது அவர்கள்தானே" என்று கங்குலி கூறினார்.