Last Updated : 22 Jul, 2017 09:24 AM

 

Published : 22 Jul 2017 09:24 AM
Last Updated : 22 Jul 2017 09:24 AM

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சாதனை: கேப்டன் மிதாலி ராஜ் குதூகலம்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. டெர்பியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மான்பிரித் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் விளாசினார்.

மிதாலி ராஜ் 36, தீப்தி சர்மா 25, வேதா கிருஷ்ணமூர்த்தி 16 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 282 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் அலெக்ஸ் பிளாக்வெல், பீம்ஸூடன் இணைந்து இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.

எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடிய அவர் 56 பந்துகளில், 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் விளாசிய நிலையில் தீப்தி சர்மா வீசிய 40.1-வது ஓவரில் போல்டானர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3, கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கூறும்போது, “ஒரு அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தொடர் எளிதாக இருக்காது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் தேவையான நேரத்தில் பேட்டிங், பந்து வீச்சில் வீராங்கனைகள் சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள். இங்கிலாந்து அணிக்கு இது எளிதாக இருக்காது.

எனினும் போட்டியின் தினத்தில் எப்படி நாங்கள் செயல்படுகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் எங்களது திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஏனெனில் இங்கிலாந்து அணி, லீக் சுற்றில் எங்களிடம் தோல்வியடைந்த பிறகு உச்ச கட்ட பார்முக்கு சென்றுள்ளது.

சிறந்த திறனை வெளிப்படுத்தியே அவர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்கள். ஹர்மான்பிரித்தின் ஆட்டம் விதிவிலக்காக அமைந்தது. பந்து வீச்சாளர்களும் சிறந்த திறனை வெளிப்படுத்தினார்கள். கோஸ்வாமி, ஷிகா பாண்டே மற்றும் சுழற்பந்து வீச்சளார்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த குழு தற்போது கச்சிதமாக உள்ளது.

லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தாலும் நியூஸிலாந்து அணியை வீழ்த்தினோம். தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கால்பதித்து மிகப்பெரிய அளவிலான சாதனை படைத்துள்ளோம்.

இறுதிப் போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்றால் இந்தியாவில் அது பெரிய விஷயமாக பார்க்கப்படும். இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டில் இது ஒருவகையான புரட்சியாக இருக்கும்” என்றார்.

ஹர்மான்பிரித்

ஆட்ட நாயகியாக தேர்வான ஹர்மான்பிரித் கவுர் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடரில் எனக்கு பேட் செய்த அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளேன். என்னை நானே நிரூபிக்க விரும்பினேன். அது சாத்தியப்பட்டுள்ளது. இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x