Published : 21 Jul 2017 09:35 AM
Last Updated : 21 Jul 2017 09:35 AM

கவுர் விளாசல் 171 ரன்களுடன் சாம்பியன் ஆஸி.யை வீழ்த்தி உ.கோப்பை இறுதியில் இந்திய அணி

டெர்பியில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிக்குத் தகுதி பெற்றது.

இரண்டாவது முறையாக இந்திய அணி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தை லார்ட்ஸ் மைதானத்தில் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி சந்திக்கிறது.

கவுர் 115 பந்துகளில் 20 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 171 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 42 ஓவர்களில் 281/4 என்ற பெரிய இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 41-வது ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.

இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கிய போது ஜுலன் கோஸ்வாமியும், பாண்டேயும் அபாரமாக வீசினர் இதில் பாண்டே முதலில் மூனியை 1 ரன்னில் பவுல்டு செய்ய, கேப்டன் லேனிங்கை ஜுலன் கோஸ்வாமி அபாரமான ஒரு பந்தில் கிளீன் பவுல்டு செய்தார். கேப்டன் லேனிங் 8 பந்துகள் ஆடியும் தன் ரன் எண்ணிக்கையைத் தொடங்க முடியவில்லை, கடைசியில் ஜுனல் கோஸ்வாமி ஒரு பந்தை லேட் ஸ்விங் செய்ய ஸ்கொயர் ஆன லேனிங்கின் ஆஃப் ஸ்டம்பைப் பந்து தொந்தரவு செய்தது.

மற்றொரு தொடக்க வீரர் போல்டன் 14 ரன்களில் ஷர்மாவிடம் அவரது பவுலிங்கிலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆகும் போது ஆஸ்திரேலியா 8-வது ஓவரில் 21/3 என்று தோல்வி முகம் காட்டியது.

ஆனால் வில்லனி என்ற ஒருவர் இறங்கினார் அவர் உண்மையில் இந்திய அணிக்கு வில்லன் ஆகியிருப்பார், இவரும் கவுர் போலவே தனியாக தன் போக்கில் பவுண்டரிகளை அடித்தார். இவரும், பெர்ரி (38) என்பவரும் இணைந்து ஸ்கோரை 126 ரன்களுக்கு கொண்டு சென்ற போது 24-வது ஓவரில் அபாயகரமான வில்லனி 58 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ராஜேஸ்வரி கெயக்வாடின் இடது கை ஸ்பின்னுக்கு மந்தனாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இவர் விக்கெட்டுடன் சேர்த்து அதன் பிறகு 43 ரன்களில் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது

169/9 என்ற நிலையில் அனுபவமிக்க 33 வயது வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா பிளாக்வெல் இந்தியாவை அச்சுறுத்தினார், கடைசி வீராங்கனை பீம்ஸை வைத்துக் கொண்டு இவர் வெளுத்து வாங்கினார், மிகப்பெரிய சிக்சர்கள், கோஸ்வாமியை ஒரு பளார் நேர் டிரைவ், ஸ்வீப், கட்ஷாட்கள் என்று அசத்தியதோடு இந்திய அணியின் வெற்றியை தற்காலிகமாக அச்சுறுத்தினார். கடைசி விக்கெட்டுக்காக 76 ரன்களை சொற்பப் பந்துகளில் இருவரும் சேர்க்க பிளாக்வெல் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்திருந்த போது சர்மா பந்தில் பவுல்டு ஆனார். இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

இந்தியத் தரப்பில் ஜுலன் கோஸ்வாமி, பாண்டே ஆகிய வேகப்பந்து வீச்சாளார்கள் தங்களிடையே 14 ஓவர்களைப் பகிர்ந்து கொண்டாலும் 52 ரன்களையே விட்டுக் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஆனால் ஸ்பின்னர்கள் சரியாக வீசவில்லை. சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனால் 7 ஓவர்களில் 59 ரன்களை கொடுத்தார். கெயக்வாட், பூனம் யாதவ் ஆகியோரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினாலும் ஓவருக்கு 7 ரன்களுக்கு சற்றுக் குறைவாகக் கொடுத்தனர்.

இறுதியில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x