

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 87 ரன்களையும் எடுத்து ஒரு ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய மொயின் அலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்ரவுண்ட் முன்னேற்றம் கண்டுள்ளார்.
வெற்றி பெற 331 ரன்கள் இலக்கைக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி அன்று 36.4 ஓவர்களில் 119 ரன்களுக்குச் சுருண்டது. மொயின் அலி 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முதல் இன்னிங்சில் 4 விகெட்டுகள், 87 ரன்கள் என்று அசத்தினார்.
இதனையடுத்து ஐசிசி டெஸ்ட் பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர்கள் தரவரிசைகளில் ஆல்ரவுண்ட் முன்னேற்றம் கண்டார். அதாவது பேட்டிங்கில் 3 இடங்கள் முன்னேறி 21-வது இடத்திற்கு வந்துள்ளார்.
பந்து வீச்சில் 9 இடங்கள் முன்னேறி டாப் 20-க்குள் நுழைந்து 19-வது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பென் ஸ்டோக்சைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே கேப்டனாக வெற்றி பெற்ற ஜோ ரூட், 190 ரன்களையும் விளாசியதால் பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சனைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.