Published : 12 Jul 2017 10:18 AM
Last Updated : 12 Jul 2017 10:18 AM

டிஎன்பிஎல் 2-வது சீசன் பிரபலம் அடையும்: எல்.பாலாஜி நம்பிக்கை

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2-வது சீசன் போட்டிகள் முதல் சீசனை விட பெரிய அளவில் வெற்றி பெறும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி தெரிவித்தார்.

ஐபிஎல் பாணியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டிகள் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை, திண்டுக்கல், திருநெல்வேயில் நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

22-ம் தேதி சென்னை சேப் பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பி யனான ஆல்பர்ட் டூட்டி பேட்ரி யாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகிறது. இம்முறை ஐபிஎல் பாணியில் பிளே ஆப் சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று 1-ல் மோதும். இந்த ஆட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறும். 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் ஆகஸ்ட் 16-ம் தேதி திண்டுக்கலில் மோதுகின்றன.

ஆகஸ்ட் 18-ம் தேதி தகுதிச் சுற்று 2 திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் தகுதிச் சுற்றில் 1-ல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்த அணியும் மோதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலை யில் டிஎன்பிஎல் 2-வது சீசன் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான எல்.பாலாஜி கூறும்போது, “டிஎன்பிஎல் தொடர் கடந்த ஆண்டு வெற்றியடைந்தது. ரஞ்சி கோப்பை தொடருக்காக நான் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தபோது அனைவருமே டிஎன்பிஎல் தொடரை வெகுவாக பாராட்டினார்கள்.

டிஎன்பிஎல் முதல் சீசன் போட்டியின் மூலம் டி.நடராஜன், என்.ஜெகதீசன் போன்ற சிறந்த வீரர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இந்த தொடரின் மூலம் இளம் வீரர்கள் அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர். அவர்கள் வேகமாக முன்னேற்றம் அடையவும் டிஎன்பிஎல் தொடர் உதவியாக இருக்கிறது.

சிறந்த வீரர்களுக்கு எதிராக அதிகளவிலான ஆட்டங்களில் விளையாடும் போது வீரர்கள் தங்களது திறனை மேலும் சிறந்த வகையில் வெளிப்படுத்த முடியும். அந்த பலனையும் வீரர்கள் இந்த தொடர் மூலமாக பெறுகின்றனர்.

இம்முறை ரசிகர்கள் டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுடன் அதிக அளவில் இணைந்திருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இது இந்த தொடர் மேலும் சிறந்த முறையில் வளர்ச்சி அடைவதற்கு உதவியாக இருக்கும்” என்றார்.

இதற்கிடையே முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முறை தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளுக்கும் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x