

இலங்கைக்கு எதிரான தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படவில்லை, மாறாக அவர் ஏ தொடருக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பொறுப்பில் செல்கிறார்.
இந்நிலையில் ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
லேசாக வருத்தம்தான். ஆனால் அணித்தேர்வாளர்களின் முடிவை மதிக்கிறேன். இப்படிப்பட்ட விஷயங்கள் இப்படித்தான் செல்லும், இப்போது என் கவனம் முழுதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஏ தொடரில்தான். இது ஒரு புது அனுபவமாக அமையும். இதுவரை தென் ஆப்பிரிக்கா சென்றதில்லை. எனவே அந்தத் தொடருக்கு நன்றாகத் தயாரித்துக் கொண்டு அங்கு நன்றாகச் செயல்படுவதில்தான் இப்போது கவனம்.
முச்சதத்திற்குப் பிறகு என்னுடைய இன்னிங்ஸ்களை திரும்பிப் பார்க்கும் போது நன்றாகத் தொடங்கி பெரிய ஸ்கோருக்குச் செல்லாமல் அவுட் ஆகியிருக்கிறேன். ஆனால் பேட்ஸ்மென் ஒருவருக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும். இப்போது அதைப்பற்றி பேசி பயனில்லை.
முச்சதம் அடித்த அந்த உற்சாக உணர்வை சற்றே இழந்து வருகிறேன், அதனால் அந்த வீடியோவை 3 முறை பார்த்தேன். எனவே மீண்டும் ஒருமுறை அதைப்பார்க்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் கருண் நாயர்.