

ஐபிஎல் பாணியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டிகள் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை, திண்டுக்கல், திருநெல்வேயில் நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரடியாக டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். டிக்கெட்டின் விலை ரூ.50 மற்றும் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருநெல்வேலியில் நடைபெறும் முதல் 4 ஆட்டங்களுக்கான டிக்கெட்களையும், திண்டுக்கலில் நடைபெறும் முதல் இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்களையும் அந்தந்த பகுதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.