Published : 13 Nov 2014 09:38 PM
Last Updated : 13 Nov 2014 09:38 PM

இலங்கையை துவம்சம் செய்தார் ரோஹித் சர்மா: 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ரோஹித் 9 சிக்ஸர், 33 பவுண்டரி, 264 ரன்கள் விளாசல்

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார்.

முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த இலங்கை அணி 43.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு சுருண்டது. ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட ஸ்கோரைக்கூட இலங்கையால் எடுக்க முடியவில்லை.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அஜிங்க்ய ரஹானேவும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். இந்தியா 40 ரன்களை எட்டியபோது ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 24 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த அம்பட்டி ராயுடு 8 ரன்களில் நடையைக் கட்டினார்.

3-வது விக்கெட்டுக்கு 202

இதையடுத்து கேப்டன் கோலி களமிறங்கினார். மறுமுனையில் ரோஹித் சர்மா 72 பந்துகளில் அரைசதம் கடக்க, பின்னர் ஆட்டம் சூடுபிடித்தது. முதல் 29 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்தியாவின் ஸ்கோர், பின்னர் ரோஹித்தின் அதிரடியால் எகிறியது. சரியாக 100 பந்துகளில் சதமடித்த ரோஹித் சர்மா, பின்னர் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினார். மறுமுனையில் 56 பந்துகளில் அரைசதம் கண்ட கோலி, 64 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கோலி-ரோஹித் சர்மா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.

ரோஹித் இரட்டைச் சதம்

பின்னர் வந்த ரெய்னா 5 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ராபின் உத்தப்பா களம்புகுந்தார். தொடர்ந்து வேகம் காட்டிய ரோஹித் சர்மா, மென்டிஸ் வீசிய 44-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசித் தள்ளி இரட்டைச் சதத்தை நெருங்கினார். துளியும் பதற்றமின்றி விளையாடிய ரோஹித் சர்மா, குலசேகரா வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து இரட்டைச் சதத்தை (151 பந்துகளில்) எட்டினார்.

ஒருபுறம் உத்தப்பா ஒவ்வொரு ரன்னாக எடுக்க, மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடினார் ரோஹித் சர்மா. கடைசிக் கட்ட ஓவர்களில் பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர்களை பதறவைத்தார். எப்படி பந்துவீசினாலும் அதை பவுண்டரி எல்லைக்கு விரட்டிக் கொண்டேயிருந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவர் ஜெயவர்த்தனாவிடம் கேட்ச் ஆனார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். உத்தப்பா 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இலங்கை தரப்பில் அதிகபட்ச மாக குலசேகரா 9 ஓவர்களில் 89 ரன்களை வாரி வழங்கினார்.

இலங்கை தோல்வி

இலங்கை அணி ரோஹித் சர்மாவின் ஸ்கோரையாவது தாண்டுமா என்று பலரும் சந்தேகப்பட்ட நிலையில், களத்தில் இறங்கினார்கள் குசால் பெரேராவும் தில்ஷனும்.

முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே பெரேரா உமேஷ் யாதவின் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார். அதன்பிறகு 6வது ஓவரின் முடிவில் பின்னியின் பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சன்டிமல். அதிக ரன்கள் அடித்து உலக சாதனை செய்த ரோஹித் சர்மா சோர்வாக காணப்படுவார் என்று பார்த்தால், அவர் உற்சாகமாக ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். 9வது ஓவரில் ஜெயவர்தனே 2 ரன்னில் அவுட் ஆக, அடுத்த ஓவரில் தில்ஷான் 34 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது இலங்கை அணி.

14வது ஓவரிலிருந்து ஸ்பின்னர் கரண் சர்மா பவுலிங் செய்தார். 22 ஓவர் வரை இலங்கை விக்கெட் இழக்காமல் இருந்ததால் அக்‌ஷர் படேலை அழைத்தார் கோலி. அதற்குப் பலனும் கிடைத்தது. மேத்யூஸ் 75 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஷர் படேலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மேத்யூஸ் அவுட் ஆனபிறகு ஜோடி சேர்ந்த திரிமானியும் திசாரா பெரேராவும் அடித்து ஆட ஆரம்பித்தார்கள். கரண் சர்மாவின் 8வது ஓவரில் 23 ரன்கள் விளாசப்பட்டன (3 சிக்ஸர்கள்). கடைசியில் இருவருமே 37-வது ஓவரில் குல்கர்னியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். திரிமானி 59 ரன்கள் எடுத்தார். குல்கர்னி தனது அடுத்த ஓவரிலும் மீண்டும் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 233 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து தோல்வி உறுதியான நிலையில், ரோஹித் சர்மாவின் ஸ்கோரை இலங்கை தொட்டுவிடக்கூடாதே என்று ரசிகர்கள் திடீரென பரபரப்பானார்கள். இறுதியில் ரோஹித்தின் தனிப்பட்ட ஸ்கோரைக்கூட தாண்டமுடியாமல் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. இந்திய அணியில் குல்கர்னி 4 விக்கெட்டுகளை எடுத்தார். யாதவ், பின்னி, படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

ஈடன் கார்டன்ஸின் 150 வது ஆண்டு விழா கொண்டாட்டம் ரோஹித் சர்மாவின் உலக சாதனைகளால் மேலும் சிறப்பு பெற்றுவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x