Last Updated : 07 Jul, 2017 10:16 AM

 

Published : 07 Jul 2017 10:16 AM
Last Updated : 07 Jul 2017 10:16 AM

கால்பந்து தரவரிசை பட்டியல்: இந்திய அணி 96-வது இடத்துக்கு முன்னேற்றம்

கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 96-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்திய கால்பந்து அணி, கடந்த 2015-ம் ஆண்டு, தரவரிசைப் பட்டியலில் 171-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கான்ஸ்டாண்டைன் பொறுப் பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறியது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கால்பந்து போட்டிகளில் நேபாளம், கிர்கிஸ்தான் ஆகிய அணிகளை இந்தியா வென்றது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இந்திய அணி 341 புள்ளிகளைப் பெற்று கால்பந்து தரவரிசைப் பட்டியலில் 96-வது இடத்துக்கு முன்னேறியது. இது கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பெற்ற 2-வது மிகப்பெரிய இடமாகும். கடந்த 96-ம் ஆண்டு இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் பிடித்த 94-வது இடமே உச்சபட்ச இடமாகும். இந்திய கால்பந்து அணி கடந்த 15 போட்டிகளில் 13-ல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதில் கடைசி 8 போட்டிகளில் ஒன்றில்கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னேற்றம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டாண்டைன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி 96-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நமது வீரர்களின் கடின உழைப்பே இந்த முன்னேற்றத்துக்கு காரணம். இந்த முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதுடன் நில்லாமல் அடுத்த போட்டியில் வெற்றி பெறுவது எப்படி என்பதில் வீரர்கள் கவனம் கவனம் செலுத்த வேண்டும்.

கால்பந்து விளையாட்டில் ஒரு தனிப்பட்ட வீரரால் மட்டும் வெற்றியை பெற்றுத்தர இயலாது. அதற்காக ஒவ்வொரு வீரரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்திய அணி நன்றாக விளையாடவில்லை என்றால் அதற்கான பொறுப்பு என்னையே சாரும். அதே நேரத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அதற்கான பெருமை ஒவ்வொரு வீரரையும் சாரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தரவரிசைப் பட்டியலில் இந்திய கால்பந்து அணி 96-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய கால்பந்து அணிக்கு இது பொற்காலமாகும். தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முன்னேறி உள்ளதற்கு வாழ்த்துகள். தரவரிசைப் பட்டியலில் மேலும் முன்னேற இந்திய வீரர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x