

மகளிர் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியைப் பெற்றது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி தங்கள் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை வென்றது. இந்நிலையில் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
முதல் 2 லீக் ஆட்டங்களில் பேட்டிங்கில் மிரட்டிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் கடும் சவாலாக விளங்கினர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மந்தனா, நேற்று 2 ரன்களில் டயானா பேகின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணி யின் விக்கெட்கள் சீரான இடை வெளியில் விழத் தொடங்கின.
பூனம் ராவத் (47 ரன்கள்), தீப்தி சர்மா (28 ரன்கள்), சுஷ்மா வர்மா (33 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஓரளவு ரன்களைச் சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் நஷ்ரா சந்து அபாரமாக பந்துவீசி 26 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
வெற்றிபெற 170 ரன்களை எடுத்தால் போதும் என்ற எளிய இலக்குடன் ஆடவந்த பாகிஸ்தான் அணி, ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியின் விக்கெட்கள் மளமளவென்று சரிந்தன. ஆயிஷா சபர் 1, ஜவேரியா கான் 6, சிதாரா நவாஸ் 0, இரம் ஜாவேத் 0 ரன்களில் அவுட் ஆக அந்த அணி 14 ரன்களில் 4 விக்கெட்களை இழந்தது. இதிலிருந்து பாகிஸ்தான் அணியால் மீள முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த அணி 38.1 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 3-வது வெற்றியை ருசித்தது.