

நடப்பு கிரிக்கெட் உலகில் 4 சிறந்த வீரர்களான ரூட், வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியில் தனக்குப் பிடித்த பேட்ஸ்மென் விராட் கோலிதான் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார், இதில் ஒருவர் ரூட், ஸ்மித், வில்லியம்சன், கோலி யார் சிறந்தவர் என்று கேட்டதற்கு ஆமிர், “இவர்கள் அனைவருமே சிறந்தவர்கள்தாம், ஆனால் எனக்குப் பிடித்தது விராட் கோலி” என்றார் ஆமிர்.
அதே போல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஆமிருக்கு பிடித்த தருணம் எது என்று இன்னொரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, “என்னுடைய முதல் ஸ்பெல் (ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோரை வீழ்த்தியது)” என்றார்.
அதே போல் தான் வீசியதிலேயே மிகவும் சிறந்த பந்து வீச்சு எது என்ற கேள்விக்கு மொகமது ஆமிர், “பல ஸ்பெல்கள் இருந்தாலும் 2016 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வீசிய அந்த ஸ்பெல்லை மறக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
கோலியும் 2016 ஆசியக் கோப்பைக்குப் பிறகு மொகமது ஆமிரை புகழும் போது, “அவர் வீசிய விதத்திற்காக நான் அவரை புகழவே செய்வேன். அவர் பந்து வீசும்போதே நான் அவரைப் பாராட்டியுள்ளேன். இம்மாதிரியான ஒரு பந்து வீச்சை ஆடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆமிர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்” என்று புகழ்ந்தார்.