Published : 31 Jul 2017 04:33 PM
Last Updated : 31 Jul 2017 04:33 PM

தோனி, யுவராஜ் குறித்து உரிய நேரத்தில் முடிவு: தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் எதிர்காலம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என்று அணித்தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, “பார்ப்போம், நாம் இது குறித்து பேசியாக வேண்டும். நாம் முடிவெடுக்க வேண்டும், எப்படிப் போகிறது என்று பார்ப்போம். யார் கூடுதல் மதிப்பு சேர்க்க முடியும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. வீரருக்கு வீரர் என்ற அடிப்படையில் நாங்கள் செல்கிறோம். எப்போது இவர்கள் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். மொத்தமாக தயாரிப்பில்லாமல் இருக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் சமச்சீராக செயல்படுவது அவசியம்.

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி எங்கள் பார்வையிலிருந்து இந்திய அணிக்குச் சிறப்பான தொடரே. மேலும் இந்தத் தொடர்தான் எங்கள் மனத்தைத் திறந்தது. இந்தத் தொடரில்தான் நம் உண்மையான பலம் என்ன என்பது தெரிந்தது. சில குறைபாடுகள் உள்ளன, அதனை வரும் 18-20 மாதங்களில் சரி செய்து விடுவோம்.

எங்கள் மனதில் உள்ள எந்த புதிய வீரராக இருந்தாலும் அவர் உலகக்கோப்பை 2019-க்குள் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியுமாறு அவகாசம் அளிக்கப்படும்.

பும்ரா நல்ல பவுலர்தான், ஆனால் இலங்கையில் ஆடுவது இந்தியாவில் ஆடுவது போல்தான். இங்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் தேவையா என்பதுதான் கேள்வி. அதனால்தான் பும்ராவுக்குப் பதில் ஹர்திக் பாண்டியாவைத் தேர்வு செய்தோம். பேட்டிங், பீல்டிங்கினால் பாண்டியா அணிக்கு கூடுதல் மதிப்பு சேர்ப்பார். சந்தேகமின்றி பும்ரா உள்நாட்டு கிரிக்கெட், ஒருநாள், டி20 என்று அசத்தி வருகிறார், ஆனால் நாங்கள் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் எடுக்க முடியுமெனில் அவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பும்ரா தயாராகி விட்டார், அயல்நாட்டுத் தொடர்களில் பார்ப்போம்.

அணித்தேர்வில் கோலியின் பரிந்துரை பற்றி..

எந்த ஒரு இறுதி முடிவையும் அணித்தேர்வுக்குழுவே எடுக்கிறது. ஆனால் கேப்டன் தன் தெரிவைக் கேட்கவில்லை என்று கூறினால் நான் பொய் கூறுகிறேன் என்று அர்த்தம். ஆனால் பலதரப்பட்ட யோசனைகளும் வரும்போதுதான் நல்ல முடிவை எடுக்க முடியும். நல்ல வேளையாக இங்கு தோனியுடனும் சரி, விராட் கோலியுடனும் சரி விவாதங்கள் ஆரோக்கியமாக செல்கின்றன. இருவருமே நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களது சூப்பர் ஸ்டார் தகுதி மீது நாங்கள் எங்கள் கருத்தைத் திணிக்கிறோமா என்ற கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் அணித்தேர்வுக் கூட்டத்தில் அவர் ஒரு கேப்டனாகவே வந்து அமர்கிறார். இதுவரை நடந்த கூட்டங்களெல்லம் சுவாரசியமான கூட்டங்களே. எப்படியிருந்தாலும் இறுதி முடிவு எங்களுடையதே. சில வேளைகளில் இது எழுப்பப்பட்ட கேள்விகளை மீறி செயல்படுவதாக இருந்தாலும் அது அப்படித்தான்.

இவ்வாறு கூறினார் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x