Published : 13 Jul 2017 03:35 PM
Last Updated : 13 Jul 2017 03:35 PM

லோதா பரிந்துரைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்: ஸ்ரீநிவாசன், நிரஞ்சன் ஷா மீது நிர்வாகக் கமிட்டி குற்றச்சாட்டு

பிசிசிஐ நிர்வாகத்தினை சீர்த்திருத்துவதற்கான நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஸ்ரீநிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்ரீநிவாசனும், நிரஞ்சன் ஷாவும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி மாநில கிரிக்கெட் சங்கங்களை லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு எதிராக திருப்பி வருவதாக முன்னால் சிஏஜி விநோத் ராய் தலைமையிலான குழு குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு நிர்வாகக் கமிட்டி அனுப்பிய 4-வது அறிக்கையில், ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் ‘இடையூறு’ சூழல் நிலவியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்கு முன்பாக பிசிசிஐ உறுப்பினர்கள் முழு அளவில் கருத்தொற்றுமைக்கு வந்தனர் எனவும், பொதுக்குழு கூட்டத்தில் தகுதியிழப்புச் செய்யப்பட்ட நிர்வாகிகள், அதாவது ஸ்ரீநிவாசன், மற்றும் ஷா ஆகியோர் கலந்து கொண்ட பிறகு எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக ஸ்ரீநிவாசனும், சவுராஷ்டிரா சங்க பிரதிநிதியாக நிரஞ்சன் ஷாவும் கலந்து கொண்டனர்.

மாநில மற்றும் உறுப்பு கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தினால் தகுதியிழப்புச் செய்யப்பட்ட நிர்வாகிகளை நியமித்ததே முதலில் மீறல் ஆகும் என்றும் இது கோர்ட் உத்தரவைப் புறக்கணிக்கும் செயல் என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டினர்.

இவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பிசிசிஐ பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்வது, “உச்ச நீதிமன்றத்தினால் இவர்கள் நேரடியாக எதைச் செய்ய தடை விதித்திருந்ததோ அதை மறைமுகமாகச் செய்ய அனுமதிக்கிறது” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இதனை பிசிசிஐயின் ‘அருவருக்கத்தக்க நடத்தை’ என்று வர்ணித்த இந்த அறிக்கை சிறப்புப் பொதுக்குழு கூட்டத்துக்கு நிரஞ்சன் ஷா அழைக்கப்பட்டுள்ளதும் விதிமீறல் என்று குறிப்பிட்டுள்ளது.

“பொதுக்குழுக்கூட்டத்தின் ஒலிப்பதிவின் படி சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட நடைமுறைகளை தகுதியிழப்புச் செய்யப்பட்ட நபர்கள் எளிதாக மாற்றிவிடுகின்றனர், இதனால் லோதா பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்கள் கூட ஒன்று தகுதியிழந்த நபர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர், அல்லது அமைதியாக இருந்து விடுகின்றனர்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே தகுதியிழப்பு செய்யப்பட்ட நபர்கள் நிர்வாகக் கமிட்டியின் செயல்பாடுகளில் மறைமுகமாக குறுக்கிடுவதை கோர்ட் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிசிசிஐ இணைச் செயலர் அமிதாப் சவுத்ரி கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களை சீர்த்திருத்தங்களுக்காக ஊக்குவிப்பு செய்பவர்களில் ஒருவராக இருக்கிறார் மாறாக பொருளாளர் அனிருத் சவுத்ரி எந்த ஒரு தைரியமும் இன்றி பேசுவதற்கான உறுதியின்றி வெறும் பார்வையாளராக முடிந்து விடுகிறார் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x