Published : 12 Jul 2017 03:52 PM
Last Updated : 12 Jul 2017 03:52 PM

ஜிம்பாப்வேவுடன் தோல்வி எதிரொலி: மாத்யூஸ் விலகல் - இலங்கை அணியின் புது கேப்டனாக தினேஷ் சண்டிமால் தேர்வு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக கேப்டன் பதவியிலிருந்து மாத்யூஸ் விலகியதைத் தொடர்ந்து தினேஷ் சண்டிமால் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என கைப்பற்றியது. இந்தத் தோல்வியையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள், 20-20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் கேப்டனாக பதவி வகித்த ஏஞ்சலா மாத்யூஸ் கேப்டன் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு விலகினார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து மாத்யூஸ் கூறும்போது, "கனத்த மனதுடன் கேப்டன் பதவியிலிருந்து விடை பெறுகிறேன். நான் கடந்த நான்கு வருடங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்பாகவே பணியாற்றி உள்ளேன்.

என்னைப் பற்றி நிறைய நபர்கள் குறை கூறுகிறார்கள். உண்மையைக் கூற வேண்டும் என்றால் நான் நேர்மையாக விளையாடி உள்ளேன். என்னுடைய 100% உழைப்பை அளித்திருக்கிறேன். அணியில் எனக்கு பெரும் ஆதரவு கிடைத்ததில் சந்தேகமில்லை. இருப்பினும் கேப்டன் பதவியிலிருந்து விலக இதுதான் சரியான தருணம்.

சில வருடங்களுக்கு முன்பே கேப்டன் பதவியிலிருந்து விலக எண்ணினேன். ஆனால் அப்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாரான நிலையில் இல்லை. ஆனால் இப்போது அணியில் புதிய சிந்தனைகள் வரும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது கேப்டன் பதவியை ஏற்றுக் கொள்ள அணியில் உள்ள நபர்கள் தயாராகிவிட்டனர்" என்றார்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்புவில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் வாரிய கூட்டத்தில், ஜூலை 14-ம் தேதி ஜிம்பாம்வே அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு 27 வயதான தினேஷ் சண்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x