

ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக்கழகத்தில் முதுநிலை விளையாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணி ஆணையை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று ஸ்குவாஷ் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்றவர் ஜோஷ்னா சின்னப்பா. அவர் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று, தற்போது இந்தியாவின் முதல்நிலை வீராங்கனையாகவும் திகழ்கிறார்.
ஜோஷ்னா சின்னப்பாவின் விளையாட்டுத்திறனை ஊக்கு விக்கும் வகையிலும், அவரது திறனை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், முதல்வர் கே.பழனிசாமியிடம் நேரில் கோரிக்கை வைத்ததன் அடிப் படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பதவியில் ஜோஷ்னா சின்னப்பா நேரடியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்க மணி, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை செயலர் விக்ரம் கபூர், மின்வாரிய தலைவர் எம்.சாய்குமார், இளைஞர் நலத்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.