

கொழும்புவில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் 388 ரன்கள் வெற்றி இலக்கை இலங்கை அணி விரட்டி 391/6 என்ற ஸ்கோரை எட்டி ஜிம்பாப்வேயை போராடி வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது.
இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக விரட்டியுள்ளமை இதுவே முதல் முறை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது மிகப்பெரிய விரட்டலாகும் இது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ்களிலும் ஸ்கோர் 300-400 ரன்களுக்கு இடையே இருந்தது இது 3-வது முறையாகும்.
170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இலங்கை இன்று களமிறங்கி 114.5 ஓவர்களில் 391/6 என்று வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே லெக் பிரேக் பவுலர் கிரீமர் தனது முதல் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகளோடு 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளுடன் அசத்தினார், ஆனால் விக்கெட் கீப்பர் சகப்வா கொஞ்சம் விழிப்புடன் இருந்திருந்தால் ஜிம்பாப்வேவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியிருக்கும், அதே போல் உணவு இடைவேளைக்கு முன்னதாக டிக்வெல்லாவுக்கு ஸ்டம்பிங்கை 3-வது நடுவர் ஏன் அவுட் இல்லை என்று கூறினார் என்பதும் கடவுளுக்கே வெளிச்சம், கிரீஸின் மேல் காலிருந்தால் அது அவுட்தான். டிக்வெல்லாவின் ஷூவின் எந்த ஒரு பகுதியும் கிரிஸிற்குள் இல்லை, இல்லவேயில்லை, ஏனோ 3-வது நடுவர் செட்டித்தோடி ஷம்சுதின் அவுட் கொடுக்கவில்லை, இதில் ஜிம்பாப்வே வீரர்கள், ஓய்வறையில் இருந்தவர்கள் என்று அனைவரும் கடும் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் டிக்வெல்லா, குணரத்னே இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 121 ரன்களைச் சேர்த்ததே ஜிம்பாப்வே தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இலங்கையை ஜிம்பாப்வே வீழ்த்தியதேயில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இலங்கையில் இலங்கை உட்பட எந்த அணியும் 388 ரன்கள் வெற்றி இலக்கை டெஸ்ட் போட்டிகளில் விரட்டியதில்லை என்பதும்.
இன்று ஆட்டம் தொடங்கிய முதல் ஒருமணிநேரத்தில் குசால் மெண்டிஸ் (66), அஞ்சேலோ மேத்யூஸ் (25) ஆகியோரை கிரீமர் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.
டிக்வெல்லா 37 ரன்களில் இருந்த போது பெவிலியனுக்கு வழியனுப்பப் பட்டிருக்க வேண்டும், அதுதான் 3-வது நடுவரின் மோசமான தீர்ப்பாக அமைந்தது, ஜிம்பாப்வேவுக்கு எதிராகத் திரும்பியது, இலங்கை அப்போது 237/5 என்று இருந்தது.
இன்னொரு முறை டிக்வெல்லா 63 ரன்களில் இருந்த போது சான் வில்லியம்ஸ் பந்தில் எட்ஜ் எடுக்க விக்கெட் கீப்பர் சகப்வா கேட்சை விட்டார். இலங்கைக்கு இத்தருணத்தில் வெற்றிக்கு 102 ரன்கள் தேவைப்பட்டது. குணரத்னேவுக்கும் சகப்வா ஒரு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். அந்தத் தருணத்தில் குணரத்னே அவுட் ஆகியிருந்தால் 7 விக்கெட்டுகளை இழந்திருக்கும். 50 ரன்கள் வெற்றிக்குத் தேவையாக இருந்த போது பின்கள வீரர்களை வைத்துக் கொண்டு இலங்கை திணறியிருக்கும்.
ஆனால் டிக்வெல்லா பாசிட்டிவாக ஆடி 118 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து வில்லியம்ஸ் பந்தில் கடைசியாக ஒருவழியாக சகப்வா கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். குணரத்னே 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பெரேரா 29 நாட் அவுட். இலங்கை வெற்றி.
ஆட்ட நாயகனாக குணரத்னேவும், தொடர் நாயகனாக ரங்கனா ஹெராத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.