Last Updated : 29 Aug, 2016 09:19 AM

 

Published : 29 Aug 2016 09:19 AM
Last Updated : 29 Aug 2016 09:19 AM

முதல் டி 20 போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது: லோகேஷ் ராகுல் வருத்தம்

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் முதல் டி 20 போட்டியில் 1 ரன்னில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய வீரர் லோகேஷ் ராகுல் கூறினார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களின் இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்களை எடுத்தது. இதைத்தொடர்ந்து வெற்றிபெற 246 ரன்களை எடுக்கவேண்டும் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி ஆடவந்தது.

ரஹானே 7 ரன்களிலும், கோலி 16 ரன்களிலும் அவுட் ஆனபோதும், ரோஹித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சேர்ந்து சிறப்பாக ஆடி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கினர். இருவரும் சேர்ந்து பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசி, வெற்றி இலக்கைத் துரத்தினர். இந்த ஜோடியின் துடிப்பான ஆட்டத்தால் இந்திய அணி 8.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. ரோஹித் சர்மா 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி இந்தியாவை கரைசேர்க்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் பொலார்டின் பந்தில் சார்லஸிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 28 பந்துகளைச் சந்தித்த அவர் 62 ரன்களைக் குவித்தார்.

ரோஹித் சர்மா அவுட் ஆனதைத் தொடர்ந்து ராகுலுடன் தோனி ஜோடி சேர்ந்தார். மறுபுறம் லோகேஷ் ராகுல் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பவுண்டரிகளையும், 5 சிக்சர்களையும் விளாசிய அவர் 46 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மறுபுறம் தோனியும் அதிரடியாக ஆட, கடைசி ஓவரில் 8 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியாவின் வெற்றி உறுதி என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் பிராவோ பந்துவீச வந்தார். அதுவரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இந்திய வீரர்கள் பிராவோவிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கினர். அவரது முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே இந்த ஜோடியால் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் பிராவோவின் பந்தில் சாமுவேல்ஸ்சிடம் கேட்ச் கொடுத்து தோனி அவுட் ஆனார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்களை எடுத்து 1 ரன்னில் தோற்றது. தோனி 43 ரன்களில் அவுட் ஆக, லோகேஷ் ராகுல் 110 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய லோகேஷ் ராகுல், “முதல் டி 20 போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் கடைசிவரை போராடினோம் என்பதில் திருப்தி யடைகிறேன். ஆட்டத்தின் இடை வேளையின்போது, சளைக்காமல் போராடி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோரை நெருங்கவேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு வீரரும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருப்பினும் வெற்றி நம் பக்கம் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது” என்றார்.

இப்போட்டி குறித்து நிருபர்களிடம் கூறிய தோனி, “முதல் 12 ஓவர்களில் நமது பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். ஆனால் கடைசி 8 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினர். முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்தியளிப்பதாக இருந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவரை பிராவோ சிறப்பாக வீசினார். குறிப்பாக கடைசி ஓவர்களில் அவரது பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. நான் நினைத்தபடி கடைசி பந்தை அடிக்க முடியாததால் தோல்வியடைந்தோம். இப் போட்டியில் தோற்றாலும் பிரம்மாண்டமான ஸ்கோரை நமது வீரர்கள் துரத்திய விதம் திருப்தியளிப்பதாக உள்ளது” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x